குழந்தை கடத்தல்: 10 தனிப்படை போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை

தூத்துக்குடியில் 4மாத குழந்தை கடத்தல் தொடர்பாக 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.;

Update: 2024-03-14 04:50 GMT

தூத்துக்குடி

தூத்துக்குடி அந்தோணியார் கோவில் பகுதியில் தாயுடன் சாலையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த நான்கு மாத கைக்குழந்தையை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது .தூத்துக்குடி அந்தோணியார் கோயில் அருகே சாலையில் வசித்து யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் வேலூரை சேர்ந்த சந்தியா என்ற கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண் தனது நாலு மாத பெண் குழந்தையுடன் பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி அதிகாலை சந்தியா தனது நாலு மாத கைக்குழந்தையுடன் சாலையில் ஓரத்தில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது மர்மநபர் ஒருவர் நாலு மாத பெண் குழந்தையை தூக்கி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சந்தியா தென்பாகம் காவல்துறையிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த குழந்தை கடத்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் பக்கத்து மாவட்டங்களான திருநெல்வேலி நாகர்கோவில் மதுரை விருதுநகர் திருச்சி சென்னை ஆகிய பகுதிகளுக்கும் காவல்துறையினர் சென்று குழந்தை கடத்தலில் ஈடுபடும் கும்பல் குறித்தும் கடத்தலில் ஈடுபட்ட நபர் குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் குழந்தை கடத்தல் நடைபெற்று ஐந்து நாட்களாகியும் இதுவரை கடத்தல் நபர் கண்டுபிடிக்கப்படாது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த குழந்தை கடத்தல் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் அதே அந்தோணியார் கோயில் பகுதியில் சிறுவன் ஒருவனை ஒரு கும்பல் கடத்திச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள் மற்றும் பொய் செய்திகளை பரப்புவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News