குழந்தை கடத்தல்: தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம்
தூத்துக்குடியில் 4 மாத குழந்தை கடத்தியதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தனிப்படை போலீசார் தூத்துக்குடி நெல்லை விருதுநகர் மதுரை உள்ளிட்ட பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.;
தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்
தமிழகத்தில் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவதாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்த சந்தியா என்ற தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 4 மாத குழந்தையை மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் இன்று கடத்திச் சென்றனர்.
தூத்துக்குடி தென்பாகம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார் மேலும் கடத்தப்பட்ட நான்கு மாத குழந்தையை கண்டுபிடிக்க 10 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் கைப்பற்றி தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கோவில்பட்டி மற்றும் நெல்லை விருதுநகர் மதுரை உள்ளிட்ட மாவட்டத்தில் ரயில் நிலையம் பேருந்து நிலையம் கோவில்களில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.