குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தம்!

ஊட்டி அருகே நடைபெற இருந்த இரு குழந்தை திருமணங்கள் நீதிமன்ற உத்தரவால் தடுத்து நிறுத்தப்பட்டது.

Update: 2024-07-05 05:00 GMT

பைல் படம் 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கிளன்மார்கன் மற்றும் கக்குச்சி பகுதியில் 15 மற்றும் 17 வயதான இரண்டு பெண் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் கட்டாய திருமணம் நடத்தி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளனர். குழந்தைகளுக்கு திருமணத்தை மண்டபத்தில் நடத்துவது சட்டப்படி குற்றம் என நண்பர்கள், உறவினர்கள் ஒரு சிலர் அறிவுரை கூறினாலும் பெற்றோர் அதை ஏற்கவில்லை. இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா தேவி மற்றும் குழந்தை பாதுகாப்பு அதிகாரி தாஹினி தேவி ஆகியோருக்கு இது குறித்து தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். குழந்தைகளின் பெற்றோர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் பேசி குழந்தை திருமணம் சட்டபடி குற்றம். திருமண வயது அடைந்தவுடன் திருமணம் செய்து வையுங்கள். அதற்கு முன்னர் திருமணம் செய்தால் குழந்தைகளின் உடல்நல பாதிக்கப்படும் என்று அறிவுரை கூறினர். ஆனால் குழந்தைகளின் பெற்றோர் திருமணம் செய்து வைப்பதில் குறியாக இருந்தால், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி தாஹினி தேவி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் குழந்தை திருமணத்தை தடுத்த நிறுத்த கோரி தடையாணை மனு கோரினார்.

உடனடியாக மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் அந்தந்த காவல் நிலைய காவலர்களை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். போலீசஸார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தை திருமணம் நடத்த கூடாது என்று எச்சரித்தனர். அதே நேரத்தில் திருமணம் நடைபெறுகிறதா என்பதையும் கண்காணித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி செந்தில்குமார் குழந்தை திருமணம் நடத்த கூடாது என்று தடையாணை வழங்கி உத்தரவிட்டார். இதனால் ஊட்டியில் நடை பெறவிருந்த 2 திருமணங்கள் தடுத்து நிறுத்த பட்டன. மேலும், குழந்தை திருமணங்கள் நடைபெற்றால் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் தெரிவிர்க்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News