சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு
இந்திய ஆட்சி பணிகளுக்கான முதல்நிலை தேர்வு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. பொதுப்பிரிவு மற்றும் திறனறி தேர்வு என இரு தேர்வுகள் காலையும் மாலையும் நடைபெற்றன.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது.
இதற்கான முதல்நிலை தேர்வு மே 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் இந்திய வனப் பணி தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுப் பணியாளர் ஆணையம் முடிவு செய்தது. மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி மே 26 அன்று நடக்க இருந்த குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 16 ஆம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்திய வனத்துறை சேவை பணிகளுக்கும் இன்று முதல்நிலை தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை உட்பட 5 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. 1056 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். முதல்நிலை தேர்வை பொறுத்தவரை காலை 9:30 முதல் 11:30 வரை முதல்தாள் பொது அறிவு தேர்வும், பிற்பகலில் 2:30 மணி முதல் 4:30 மணி வரை திறனறி 2 ஆம் தாள் தேர்வும் நடைபெற்றது. தேர்வர்கள் செல்ஃபோன் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.
அதேபோல பேஜர், பென் டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தீவிர சோதனைக்கு பிறகே தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.