இளம்பெண் ஆணவக்கொலையில் தடயங்களை மறைப்பு: மூன்று பேர் கைது
பட்டுக்கோட்டையில் இளம்பெண் ஆணவக்கொலையில் தடயங்களை மறைத்த பெண்ணின் உறவினர் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா (19), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர். அருகில் உள்ள கிராமமான பூவாளூரை சேர்ந்த, பாஸ்கர் மகன் நவீன், (19), டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்.
பட்டியல் இனத்தை சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம், அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் இருவரும் பணியாற்றினர். இந்நிலையில், டிச., 31 ஆம் தேதி, நண்பர்கள் முன்னிலையில், அவர்கள் திருமணம் செய்து, வீரபாண்டி அருகே, வாடகை வீட்டில் தங்கினர். இதை அறிந்த ஐஸ்வர்யாவின் தந்தை மற்றும் உறவினர்கள் சிலர் பல்லடம் காவல்துறை மூலம், கடந்த 2 ஆம் தேதி வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இந்நிலையில், 3 ஆம் தேதி, ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் கொலை செய்து, எரித்து விட்டதாக, நவீன் வாட்டாத்திக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு ஐஸ்வர்யாவின் பெற்றோர் உட்பட அவரது உறவினர்கள் என சுமார் 15க்கும் மேற்பட்டவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஐஸ்வர்யாவை அவரது தந்தை, தாய் உள்ளிட்டோர் அடித்து கழுத்தை நெறித்து, மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடமாடியது தெரிய வந்தது. மேலும் இறந்த ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் சிலர் எரித்து விட்டு தடயங்கள் இல்லாமல் செய்தனர். இதை காவல்துறையினர் விசாரணையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர்.
மேலும், தடயங்களை மறைக்க உடந்தையாக இருந்த பெருமாளின் உறவினரான சின்னராசு (30), திருச்செல்வம் (39), முருகேசன் (34), ஆகிய மூவரையும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்து, பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, வரும் ஜன.24ம் ஆம் தேதி வரை சின்னராசு, திருச்செல்வம், முருகேசன் ஆகிய மூவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டதின் பேரில், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே ஐஸ்வர்யாவின் பெற்றோர் கடந்த 10 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பலரிடம் விசாரணை நடந்து வருகிறது.