மெரினா கூட்ட நெரிசல் உயிரிழப்பிற்கு முதல்வரே முழு பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி

மெரினா கூட்ட நெரிசல் உயிரிழப்பிற்கு முதல்வரே முழு பொறுப்பு என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-07 06:35 GMT

Edapadi palanisamy

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விமான சாகசத்தை காண வருவோருக்கு அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் 5 உயிர்கள் பலியாகி உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கியதில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்துதான் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர். எவ்வளவு பேர் வருவர் என உளவுத்துறையிடம் தகவல் பெற்று திட்டமிட்டு அடிப்படை வசதிகளை செய்து தருவது அரசின் கடமை. முதலமைச்சரின் அறிவிப்பை நம்பி நிகழ்ச்சியை காண வந்த மக்களுக்கு துன்பம் நிகழ்ந்துள்ளது. பிற மாநில நகரங்களில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றபோது திட்டமிட்டு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இனியாவது லட்சக்கணக்கான மக்கள் கூடும் நிகழ்விற்கு முன்கூட்டியே திட்டமிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். இதை அரசியலாக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லி இருக்கிறார். 5 பேர் உயிரிழந்த விவகாரத்தை கூட அரசியலாக்கக்கூடாதா? வாருங்கள் என அழைத்து அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர், மக்களுக்கான தகுந்த பாதுகாப்பை செய்ய தவறி உள்ளார். ஊடகம், செய்தியில் வருவதை தான் நான் கூறுகிறேன். பல லட்சம் பேர் வரும் நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடுகள் அவசியம். ஒரு நிகழ்ச்சியை கூட சரியாக நடத்த முடியாத கையாளாகாத அரசு தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது. உளவுத்துறை எதற்காக வைத்துள்ளீர்கள்? அது செயல்படவில்லை என நீங்களே ஒத்துக்கொள்கிறீர்களா? அழைப்பு விடுக்காவிடில் கண்டிப்பாக இவ்வளவு பேர் கூடியிருக்க மாட்டார்கள். எனவே அழைப்பு விடுத்த முதல்வரே பொறுப்பு. கூட்டநெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News