சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எட்டயபுரம் சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இன்று அதிகாலை காரை ஓட்டிக் கொண்டிருந்த செல்வராஜ் தூக்கம் கலைவதற்காக காரை ஓரமாக நிறுத்தி தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வாகனம் ஒன்று பயங்கரமாக அவர்களது காரின் மீது மோதியது. இதில் கார் அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தது. நொறுங்கிய காருக்குள் 5 பேரும் சிக்கிக் கொண்டனர். இந்த கோர விபத்தில் செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மகேஷ்குமார், ராஜ்குமார் இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.