நவ.23 ஆம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!
தென்கிழக்கு வங்கக்கடலில் 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், பரவலாக மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடலில் தாமதமான தீவிர சூறாவளி புயல்கள், இந்திய பெருங்கடலில் வலுவான சலனங்கள் உருவாகாதது போன்ற காரணங்களால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையாததற்கு காரணமாக சொல்லப்படுகிறது. வருகிற 20-ந்தேதிக்கு (நாளை) பிறகு கடல் சார்ந்த அலைவுகள் இந்திய பெருங்கடலுக்கு சாதகமாக அமையும் என்பதால், இம்மாத இறுதியில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதி வரை அடுத்தடுத்த புயல் சின்னங்களை வங்கக்கடலில் உருவாக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும், வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு- வடமேற்கில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு. 21-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்று சுழற்சி உருவாக கூடும். மேலும் இது மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் வருகிற 25-ந்தேதி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.