கூடுதல் தொகை வசூல் - டாஸ்மாக் பணியாளர்களுக்கு அபராதம்
சேலம் மண்டலத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலித்த 26 டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.1.72 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்திற்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் திடீர் பயணம் மேற்கொண்டார். பின்னர் அவர் சேலத்தில் உள்ள மதுபான கிடங்குகள் மற்றும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் ஆய்வு செய்தார். அப்போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக மதுபாட்டிலுக்கு வசூல் செய்வது தெரியவந்தால் கடும் நவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு எச்சரிக்கை செய்தார்.
தொடர்ந்து சேலம் பெரமனூரில் டாஸ்மாக் மால் ஷாப்புக்கு மேலாண்மை இயக்குனர் விசாகன் சென்று ஆய்வு செய்து சில்லறை விற்பனை விலை விதி மீறல்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என கடை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட மதுபான கிடங்கில் சரக்கு இருப்பினை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், காத்திருப்பு லாரிகள் அதிக அளவில் இல்லாதவாறு பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் தலைமையில் பறக்கும் படையினர் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மதுபாட்டிலுக்கு கூடுதலாக மதுபிரியர்களிடம் பணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விதி மீறல்களில் ஈடுபட்டதாக 26 கடை பணியாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 280 அபாரதம் விதிக்கப்பட்டது. மேலும் இவர்களில் 10 பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் உத்தரவிட்டார்.