விவசாயிகளுக்கு கலெக்டர் வளர்மதி அறிவுரை
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி மகசூல் செய்திட வேண்டுமென விவசாயிகளுக்கு ஆட்சியர் வளர்மதி அறிவுரை வழங்கியுள்ளார்.
கோடை காலத்தில் சிக்கனமாக நீரை பயன்படுத்தி முழுமையான மகசூல் செய்திட ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது நிலவும் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் பற்றாக்குறையை சமாளித்திடவும், கோடை காலத்தில் வெயில் சுட்டெரிப்பதால், சிக்கனமாக நீரை பயன்படுத்தி, குறைவான நீர் தேவைப்படும் பயிரை சாகுபடி செய்ய வேண்டும்.
அதாவது கோடையில் நஞ்சை நெல் பயிர் செய்வதை விட குறைவான நீர் பயன்படும் நெல்லுக்கு மாற்றுப்பயிரான கம்பு, மக்காச்சோளம், ராகி, எள், பயறு வகை பயிர்களான பச்சை பயறு, உளுந்து, காராமணி மற்றும் குறுகிய கால தோட்டக்கலை பயிர்களை பயிர் செய்வதன் மூலம் குறைவான நீரில் நிறைவான மகசூல் மற்றும் வருமானத்தை விவசாயிகள் பெறலாம். மேலும், நிலத்தடி நீர் வீணாவதை தடுத்திடலாம்.
சிறு, குறு விவசாயிகள் நுண்ணீர் பாசன கருவிகளான தெளிப்பு நீர், மழைத்தூவான் மற்றும் சொட்டுநீர் பாசன கருவிகளை பயன்படுத்தி நிறைவான வருமானம் தரும் மக்காச்சோளம், கம்பு, சோளம், எள், ராகி, பச்சைப்பயறு, உளுந்து, காராமணி, குறுகியகால தோட்டக்கலை பயிர்களை கோடை காலத்தில் சிக்கனமாக நீரை பயன்படுத்தி பயிர் செய்திட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.