சின்னநொளம்பூரில் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணி
சின்னநொளம்பூரில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலத்தை அமைச்சர் கே என் நேரு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் சின்ன நொளம்பூரில் ரூ.4271 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருடி.ஆர்.பாலு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின்படி 2022-23 ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலையையும் பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் 2 உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் வளசரவாக்கம் மண்டலம், வார்டு-143 மற்றும் 144க்குட்பட்ட கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து, யூனியன் சாலையை சிரமமின்றி அடைவதற்கு ஏதுவாக நான்கு வழிப் பாதையாக சின்ன நொளம்பூரில் 245மீ நீளம் மற்றும் 20.70 மீ. அகலத்தில் ரூ.4271கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைப் பார்வையிட்டு ஆய்வு செய்த நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் இப்பாலப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், சன்னதி முதல் குறுக்குத் தெருவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து யூனியன் சாலையில் இணைக்கும் வகையில் ரூ.3165 கோடி மதிப்பீட்டில் இரண்டு வழிப் பாதையில் அமையும் பாலப் பணிகளைத் தொடங்கி விரைவில் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதுரவாயிலிருந்து அடையாளம்பட்டு செல்லும் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சேதமடைந்த தரைப்பாலத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.