தொடர் மின் வெட்டு - பாமகவினர் ஆர்ப்பாட்டம்

அரக்கோணம் அருகே தொடர் மின்வெட்டால் விவசாயிகள், பொதுமக்கள் ,நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறி மின்வெட்டால் கெட்டுப் போன 1,200 லிட்டர் பாலை கீழே ஊற்றி பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-02-27 07:29 GMT

ஆர்ப்பாட்டம் 

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால் , பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக தொடர் மின்வெட்டால் பசும்பால் கெட்டுப் போகிறது. இதனால் பாதிப்புக்கு ஆளான விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று நாகவேடு மின்வாரிய அலுவலகம் முன்பாக  ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நெமிலி ஒன்றிய குழு துணை தலைவர் தீனதயாளன்,  ஒன்றிய செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் ஆண்கள் ,பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வேனில்  தலா 40 லிட்டர் அளவு கொண்ட 30 கேன்களில் கொண்டு வந்த 1200 லிட்டர் பாலை கீழே ஊற்றி இவ்வளவு பால் வீணாகிப் போனது என்று மன வேதனையுடன் கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதைத்தொடர்ந்து நாகவேடு மின்வாரிய அதிகாரியுடன் பாமகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த பேச்சுவார்த்தையின் போது மின்வெட்டு இல்லாமல் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

Tags:    

Similar News