கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி!
கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களாவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
Update: 2024-02-23 07:39 GMT
கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களாவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தடையங்களை அழிக்க கூடாது என்றும் மாற்றக்கூடாது என்ற மாவட்ட நீதிபதி அப்துல் காதர் ஆய்வு செய்வதை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. 11 பேர் அடங்கிய கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் முக்கிய குற்றவாளி கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சமி, தீபு உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது அனைவரும் ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு கடந்த 6 ஆண்டு காலமாக ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கை கடந்த ஓராண்டாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இன்று மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. சி.பி.சி.ஐ.டி., ADSP முருகவேல் தலைமையிலான போலிசாரும் , அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். குற்றம்சாட்டபட்டவர்கள் தரப்பில், சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். எதிரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களாவை நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுவிற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கபட்டது. அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு கால அவகாசம் வழங்கினார். அரசு வழக்கறிஞர் கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குழுவில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகள் இருப்பதாகவும் அக்குழு கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய நீதிமன்ற அனுமதி தேவை இல்லை என்றும் வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலிசார் நிபுணர் குழுவை அழைத்து சென்று ஆய்வு செய்யலாம் என்றார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் நிபுணர் குழு ஆய்வு செய்வது குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி கொடநாடு பங்களாவை ஆய்வு செய்யும் போது முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சாட்சியங்களை அழிக்கக் கூடாது என்று உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை மார்ச் 8 தேதிக்கு ஒத்தி வைத்தார்.