திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜனவரி 25ம் தேதி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இருவரின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதை அடுத்து புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, இருவரின் நீதிமன்ற காவலையும் பிப்ரவரி 23ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.