பொய்கை குளத்தின் சுற்றுச்சுவர் சேதம்

திருப்பனந்தாள் காசி மடத்தில் பொய்கை குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது.

Update: 2023-11-01 08:50 GMT

சுற்றுச்சுவர் சேதம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பனந்தாள் காசி மடத்தின் உட்புறம் அமைந்துள்ள பொய்கை குளத்தைச் சுற்றி கட்டப்பட்டிருந்த 400 அடி நீளமுள்ள 3 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவரை அக்.29-ம் தேதி நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் முழுமையாக இடித்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக திருப்பனந்தாள் காசி திருமடம் மேலாளர் எம்.செல்வராஜ் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளது. திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாளில் குமரகுருபரால் தோற்றுவிக்கப்பட்ட காசி திருமடம் உள்ளது. இங்குள்ள பொய்கை குளத்தின் கிழக்கு பக்கம் நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த குளத்தில் தவறுதலாக இறங்கி அசம்பாவிதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த குளத்துக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதற்கிடையே, பொய்கை குளம் சம்பந்தமாக சில பிரச்சினைகளை முன்வைத்து தெருமுனை பிரச்சாரம் மற்றும் கூட்டங்கள் அண்மைக்காலமாக நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், அக்.29-ம் தேதி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் குளத்தின் சுற்றுச்சுவரை இடித்துச் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், சுற்றுச் சுவரில் இருந்த இரும்பு கதவும் இடித்து திருடப்பட்டிருக்கிறது. எனவே, சுற்றுச் சுவரை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, திருப்பனந்தாள் போலீஸார் நேற்று முன்தினம் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.வாஞ்சிநாதன் நேற்று தெரிவித்தது: திருபனந்தாளில் உள்ள பழமை வாய்ந்த காசி மடத்தை சில சமூக விரோத சக்திகள் மிரட்டுவதும், தேவையில்லாத சச்சரவுகளை உருவாக்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், மடத்தின் உள்ளே உள்ள பொய்கை குளத்தின் சுற்றுச்சுவரை இடித்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு பின் புலமாக உள்ளவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News