கணவரை ஜாமீனில் எடுக்க முயன்ற, மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள்
கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பட்டுக்கோட்டை அருகே, தன்னை அடித்து தகராறு செய்து விட்டு, சிறையில் உள்ள கணவனை, ஜாமீன் எடுக்க முயன்று வரும் மாமியாரை கொலை செய்த மருமகளை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கழுகப்புளிக்காடு பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் (43),. இவரது மனைவி பர்வீன்பானு (35), இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த செப்.13 ஆம் தேதி, ஜேம்ஸ்க்கும், பர்வீன்பானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜேம்ஸ், பர்வீன்பானுவை குடும்ப சண்டை காரணமாக அடித்துள்ளார். இதில், பர்வீன் பானு காயமடைந்தார்.இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜேம்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பர்வீன்பானு முயற்சி எடுக்கவில்லை. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட ஜேம்ஸை ஜாமினில் எடுக்க, அவரது தாயார் ஆரோக்கியமேரி (58), முயற்சி செய்து வந்துள்ளார்.
இது குறித்து அறிந்த பர்வீன்பானு, தனது மாமியாரிடம் தன்னுடைய கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டாம். அவர் வெளியில் வந்த பிறகு என்னையும், எனது மகன்களையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ஆரோக்கியமேரி மகனை ஜாமீனில் எடுப்பதில் உறுதியாக இருந்தார். இது தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரோக்கிய மேரிக்கும், பர்வீன் பானுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பர்வீன் பானு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஆரோக்கியமேரியின் தலை மற்றும் முகத்தில் வெட்டியும், தலையை பிடித்து தரையில் அடித்து தாக்கியதில், ஆரோக்கியமேரி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல்துறையினர் ஆரோக்கியமேரி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பர்வீன்பானுவை கைது செய்தனர். அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவரிடமும் விசாரித்து வருகின்றனர்.