எருமைகளுக்கானதா டேவிஸ் பூங்கா?
டேவிஸ்டேல் பூங்காவில் எருமைகள் மேய்வதால், உள்ளூர்வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா பூங்கா உள்பட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் மேற்கண்ட பூங்காக்களுக்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் உள்ளூர் பொதுமக்களும் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட ஒரு சில பூங்காக்களுக்குள் காலையில் நடை பயிற்சிக்கு செல்கின்றனர். ஆனால் இது போன்ற பெரிய பூங்காக்கள் நடை பயிற்சிக்கு செல்ல மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.
எனவே பொதுமக்கள் அந்தந்த பகுதியில் நடைபயிற்சி செல்வதற்கும், குழந்தைகள் பொழுது போக்குவதற்கும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பூங்காக்கள் அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதன்படி கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் ஊட்டி நகராட்சி சார்பில் ஊட்டி -கோத்தகிரி சாலையில் சேரிங்கிராசில் சாலையோர பூங்கா, ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே அம்பேத்கர் நினைவு பூங்கா, ஆட்சியர் அலுவலகம் அருகே டேவிஸ்டேல் பூங்கா திறக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த டேவிஸ்டேல் பூங்கா மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் கடந்த ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 91 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பூங்கா முழுவதும் புனரமைக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் இந்த பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
ஆனாலும் இந்த பூங்கா உள்ளூர் மக்களோ சுற்றுலா பயணிகளோ பயன்படுத்த முடியாத சூழ்நிலை தான் உள்ளது. பெரும்பாலான நாட்களில் பூங்கா பூட்டப்பட்டு கிடக்கிறது. எப்போதாவது திறக்கப்படும் நிலையில், மனிதர்களுக்கு பதில் எருமைகள் தான் பூங்காவில் உலா வருகின்றன. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:- டேவிஸ்டேல் பூங்காவில் ஊஞ்சல், குழந்தைகள் சறுக்கி விளையாடும் உபகரணங்கள், மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட்டும், வர்ணங்கள் பூசப்பட்டும் பளிச்சென்று காட்சி தருகிறது. ஆனால் நீரூற்றில் தண்ணீர் வருவதில்லை. பூங்கா புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆனாலும் பொதுமக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இங்கு எப்போதும் எருமைகள் உலா வருவதால், பூங்காவுக்குள் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இங்கு காவலாளி நியமிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் வழக்கமாக பூங்காக்களில் உள்ளது போல் சுழலும் கதவு அமைத்து விட்டால் கால்நடைகள் உள்ளே செல்ல முடியாது. மேலும் புதிய பூங்காவில் அவ்வப்போது குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர். ....