புலிகள் உயிரிழந்த விவகாரம் - சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் விசாரணை.

Update: 2023-11-17 05:36 GMT

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜோசப் ஹூவர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வன பகுதிகளில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 40 நாட்களில் மட்டும் 6 புலி குட்டிகள் உள்பட 10 புலிகள் உயிரிழந்தன. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியில் உள்ள சீகூர் மற்றும் சின்ன குன்னூர் வன பகுதியில் 6 புலிக்குட்டிகளும், கார்குடி, நடுவட்டம் வன பகுதிகளில் தலா ஒரு புலியும் உயிரிழந்தன. மேலும் எமரால்டு பகுதிகளில் 2 புலிகள் விசம் வைத்து கொல்லபட்டன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குட்டி புலிகளின் இறப்பு மற்றும் அவற்றின் தாய் புலிகள் மாயமானது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் விசாரிக்க முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் முடிவு செய்தனர். அதனையடுத்து இறந்த புலிகள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த சில சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கடந்த மாதம் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும், பிரபல சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் வன உயிரின வாரிய உறுப்பினருமான ஜோசப் ஹூவர் என்பவருக்கு 5 சம்மன்கள் வழங்கிய நிலையில் உதகையில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை கள இயக்குனர் அருண் முன் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் புலிகள் இறப்பு குறித்தும், சமூக வலை தலங்களில் பதிவிட்டது ஏன்? தகவல்கள் கொடுத்தது யார்? என கேள்விகள் கேட்கபட்டது. மேலும் புலிகள் இறப்பு குறித்து பேசக் கூடாது என்றும் சமூக வலை தளங்களில் பதிவிட கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த அவர் விசாரணையின் போது பாதியிலேயே வெளியேறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோசப் ஹூவர்: பல்லுயிர் சூழலை பாதுகாக்க தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி செயல்பட்டு வரும் நிலையில் புலிகள் இறப்பு குறித்து பேசவோ, பதிவிடவோ கூடாது என்ற கோணத்தில் முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் செயல்படுவது வேதனை அளிப்பதாக கூறினார். மேலும் 6 குட்டி புலிகள் இறப்பு என்பது வருத்தம் அளிக்கும் நிலையில் 2 தாய் புலிகள் உயிரிருடன் உள்ளதா? அல்லது வேட்டையாடபட்டுள்ளனவா? என்பதை வனத்துறை கண்டுபிடித்து தெளிவுபடுத்தாமல் சுற்றுசூழல் ஆர்வலர்களை சம்மன் அளித்து மிரட்டுவது போன்று விசாரணை நடத்துவது ஏற்றுகொள்ள முடியாது என்றார். மேலும் இதுதொடர்பாக தமிழக வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தேசிய புலிகள் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News