கடன் தொல்லை - தொழிலாளி தற்கொலை!
குடியாத்தம் அருகே கடன்தொல்லை காரணமாக தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பிச்சனூர் காளியம்மன்பட்டி அவ்வைநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (34), விசைத்தறி தொழிலாளி. இவருக்கு மோகனபிரியா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.விசைத்தறி நெசவுத்தொழிலில் வருமானம் இல்லாததால் பலரிடம் சுரேஷ் கடன் வாங்கியுள்ளார்.
மேலும் தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை அடைக்க ஆம்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணம் கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனஉளைச்சலில் சுரேஷ் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சுரேஷ் சிக்கன் வாங்கி வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மோகனப்பிரியா அவரது மாமனார் ரவி மற்றும் அவருடைய நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர்கள் அவரை தேடிச் சென்றபோது அவ்வை நகர் பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சுரேஷ் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து குடியாத்தம் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.