பரபரக்கும் பாஜக.. பட்டியலுடன் பறந்த அண்ணாமலை..!
பாஜக யாரும் செய்யாத வகையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வேட்பாளர்களை உறுதி செய்து பட்டியலுடன் டெல்லிக்கு பயணித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, ஜான் பாண்டியன், தேவநாதன் தேவநாதன் யாதவ் ஆகியோர் அக்கட்சியுடன் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் பாஜக சார்பில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் 39 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக சார்பில் வேட்பாளர் தேர்வுக்கான கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட அளவிலான நிர்வாகிகளிடம் விண்ணப்ப படிவத்தை கொடுத்து அதில் உங்கள் தொகுதிகளில் யார் போட்டியிடலாம் ஏன்? எதற்காக? தற்போது அவர் வகிக்கும் பதவி? உள்ளிட்ட விவரங்களுடன் நீங்கள் விரும்பும் மூன்று வேட்பாளர்களின் பெயர்களை குறிப்பிடும்படி எழுதி வாங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொகுதிவாரியாக பெற சென்னை டிநகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமயில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும், தலா இரண்டு வேட்பாளர்கள் வீதம் உத்தேச பட்டியல் இறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலை பாஜக மேலிட தலைவர்களிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும், தமிழகத்தை பொறுத்தவரையில் வேட்பாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலில் தமிழக வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறாத நிலையில் அதன் பின்னணியில் கூட்டணிகள் இன்னும் விரிவடையலாம் என்ற கணக்கில் பாஜக காத்திருந்ததாக சொல்கிறார்கள். பிரதமர் மோடி எம்ஜிஆர் ஜெயலலிதாவை போன்ற தலைவர்களை புகழ்ந்து பேசிய காரணிகள் அதிமுக வருகைக்காக பாஜக காத்திருப்பதே காட்டியது. இது ஒரு புறம் இருக்க, பாஜக கூட்டணியில்தான் இருப்பதாக பேட்டி கொடுத்த ஓபிஎஸ்-ம், டி டி வி தினகரனிடமும் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அண்ணாமலை உத்தேச பட்டியலுடன் டெல்லிக்கு சென்று ஆலோசனை நடத்த உள்ளார்.
பாஜகவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா, 2024 நாடாளுமன்ற களம் பாஜகவிற்கு வெற்றி சதவீதத்தை உயர்த்தி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.