சம்பா பயிர்களை காப்பாற்ற முழு மானியத்தில் டீசல் வழங்க கோரிக்கை
சம்பா பயிர்களை காப்பாற்ற முழு மானியத்தில் டீசல் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24x7 Website
Update: 2023-11-01 09:07 GMT
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கடந்த மாதம் நாற்று பறித்து சம்பா நடவு மேற்கொண்டனர். கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்க மறுத்துவரும் நிலையில், பம்பு செட், டீசல் இன்ஜின் கொண்டு தண்ணீர் பாய்ச்சி சம்பா பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். கடந்தாண்டை விட நிகழாண்டு மிகவும் குறைந்தளவே சம்பா சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில், இந்த சம்பா பயிர்களை காப்பாற்ற டீசலை முழு மானியத்தில் தமிழக வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாகத் தமிழ்நாடு காவிரி டெல்டா பாதுகாப்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன் கூறியது: காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், தற்போது பருவ மழையும் ஏமாற்றி வருவதால், சம்பா சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள், தற்போது செய்வதறியாது திகைத்துள்ளனர். பலர் அருகில் பம்பு செட் வைத்துள்ள விவசாயிகளிடம் ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்து தண்ணீர் பாய்ச்சிக் கொள்கின்றனர். மேலும், டீசல் இன்ஜின் வைத்துள்ளவர்கள், டீசலுக்கு வாங்கி தண்ணீர் பாய்ச்ச வேண்டி உள்ளது. ஏற்கெனவே கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், இதற்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் டீசல் வழங்க வேண்டும். சம்பா சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ் டீசல் வழங்குவதையும் சேர்க்க வேண்டும், மேலும், தலைமைச் செயலாளர் தலைமையில், அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், சம்பா தொடர்பான சிறப்புத் தொழில்நுட்ப கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, நிலைப்பாட்டை உடனே தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.