மீனவர்கள் 3 பேரை விடுதலை செய்யக் கோரிக்கை 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 3 பேரை விடுதலை செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-05-18 13:37 GMT

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 3 பேரை விடுதலை செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் நாட்டுப்படகு மீனவர்கள் 3 பேரைக் கைது செய்த இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவர் விடுத்துள்ளார்.  சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழுமங்குடாவைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மீனவர்கள் கழுமங்குடா வாஞ்சிநாதன் (22), சேதுபாவாசத்திரம் மகேஷ் (30), உச்சிப்புளி ரஞ்சித் (32) ஆகிய 3 பேரும் இரு தினங்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  எதிர்பாராதவிதமாக கடலில் திடீர் மழை மற்றும் காற்று வீசியதால், நாட்டுப்படகு திசை தெரியாமல் இலங்கை எல்லைக்கு சென்று விட்டது. மழை, காற்றால் திசை மாறிய படகையும், அதிலிருந்த மீனவர்கள் மூன்று பேரையும் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் மாவட்டம் இளவாழை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி மே 29 வரை 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதையடுத்து மூவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத் தலைவர் மல்லிப்பட்டினம் தாஜுதீன் கூறியது,  "தமிழக மீனவர்கள் மூன்று பேரையும் மனிதாபிமானமற்ற  முறையில் கைது செய்து, படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. வழக்கமாக தமிழக விசைப்படகு மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக நடக்கும். கைது செய்யும் விசைப்படகு மீனவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைப்பார்கள்.  ஆனால் திசை மாறிச் சென்ற நாட்டுப் படகு மீனவர்களை கைது செய்துள்ளது கண்டனத்துக்குரியது. எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக மீனவர்களை விடுதலை செய்து படகையும் ஒப்படைத்து, நாடு திரும்புவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்" என்றார்.

Tags:    

Similar News