நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரிக்கை

Update: 2023-12-09 11:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சாவூர் மாவட்ட 2 ஆவது மாநாடு தஞ்சாவூர் வ.உ.சி நகர் மாஸ் திருமண மண்டபத்தில், மதுரை என்.நன்மாறன், டி.லெட்சுமணன் நினைவரங்கில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.  மாநாட்டிற்கு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர் வரவேற்றார். மக்கா பள்ளி தலைவர் ஏ.ஜாஹிர் உசேன்,  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரச் செயலாளர் எம்.கோஸ்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி.எம்.காதர் உசேன் வேலை அறிக்கை வாசித்தார்.  மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "சிறுபான்மையினருக்காக பல்வேறு அமைப்புகள் இருக்கும்போது, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அமைப்பு எதற்கு என்ற கேள்வி எழுகிறது. அந்தந்த அமைப்புகளும், அந்தந்த சமூக மக்களுக்காக மட்டுமே போராடும் போது, அனைத்து சமூக சிறுபான்மை மக்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடும் அமைப்பாக சிறுபான்மை மக்கள் நலக்குழு இருக்கிறது. நாட்டின் சிறுபான்மை மக்களை குடியுரிமை இல்லாதவர்களாக ஆக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. அவர்களை அடைப்பதற்காக முகாம் அமைக்க 30 ஆயிரம் கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்கிறது. சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் தேவை இன்று அதிகரித்து வருகிறது. அனைத்து மத, சமூக மக்களும் சேர்ந்து பெற்ற சுதந்திரத்தின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்றைக்கு நாட்டில் ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளை காப்பதற்காக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டில் மீண்டும்  மோடி ஆட்சி அமைந்தால் அவர்கள் நினைத்த எல்லாவிதமான சட்டங்களையும் கொண்டு வர முடியும். தேசத்தையே தமது ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்குள் கொண்டு வர முடியும். இந்தியாவில் யார் வேண்டுமானாலும், எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். உங்களுக்கு ஓட்டுரிமை மட்டுமே உண்டு. வேறு உரிமை இல்லை. நீங்கள் மறுத்தால் பாகிஸ்தானுக்கோ, ஜெருசேலத்துக்கோ சென்று விடுங்கள் என்று சொல்லும் நிலை உருவாகும். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நாட்டை ஆளும் அபாயம் உள்ளது. விழிப்போடு செயல்பட வேண்டும்" என்றார்.  மாநில துணைத் தலைவர் ஹாஜி மூசா நிறைவுறையாற்றினார். அவர் பேசுகையில்,"எங்கள் நோக்கம் வாக்கு சேகரிப்பது அல்ல, சந்தா வாங்குவதும் அல்ல, சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படும்போது, அங்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் களப்பணியாற்றுவதுமே. இந்த அமைப்பில் இஸ்லாமியர் உண்டு. கிறிஸ்தவர் உண்டு, இந்துக்களும் உண்டு. கிறிஸ்தவர்கள் பள்ளியில் படித்தால் இந்துவாக மதம் மாற்றி விடுகிறார்கள் என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்கள் எல்லாம் கிறிஸ்துவ பள்ளியில் படித்தவர்கள் தான். அவர்கள் மதம் மாறிவிட்டார்களா... ஆர்எஸ்எஸ் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. பிராமணர் தவிர மற்றவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட போது, கல்வி வாய்ப்பை தந்தது கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகள் தான். இந்துக்களை உயர்த்துவோம் என்று மக்களை பிரித்து சூழ்ச்சி செய்யும் மோடி அரசு, பத்தாண்டு காலத்தில் இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக சொன்னார்களே.. எத்தனை பேருக்கு வழங்கினார்கள், எத்தனை இந்துக்களை முன்னேற்றினார்கள். சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை எடுத்து ரூ.15 லட்சம் தருவோம் என்றார்களே. எத்தனை இந்துக்கள் குடும்பத்திற்கு கொடுத்தார்கள். இலவசங்களை கொடுத்து மக்களை கெடுத்து விடாதீர்கள் என்று பேசும் மோடி தலைமையிலான அரசு, பெரும் முதலாளிகளுக்கு பல கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்ததே... ஏழை இந்து விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ததா?  இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம் அல்ல, பெரும் முதலாளிகளுக்கான அரசாங்கம். பொய்யை உண்மை போல பேசுவதில் மோடிக்கு நிகர் அவரே தான். இந்தியா உலக அளவில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக சொல்கிறார். ஆனால் தனிநபர் வருமானத்தில் இலங்கை, வங்காளதேசத்தை  விட பின்தங்கி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் 80 கோடி ஏழைகளுக்கு அரிசி, கோதுமை உணவு தானியம் தொடர்ந்து வழங்கி வருவதாக பேசி வருகிறார். அப்படி என்றால் அவரே அவரது ஆட்சியில் 80 கோடி மக்கள் ஏழையாக இருப்பதாக ஒத்துக் கொள்கிறார் தானே" என்றார்.  இதில், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஞானமாணிக்கம், ஏ.ஆர்.சேக் அலாவுதீன், பி.ஜேசுதாஸ் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.  இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன், ஏஐஐசி மாநிலச் செயலாளர் பாஸ்டர் கே.டேவிட் துரை, சிறுபான்மை மக்கள் நலக்குழு பாபநாசம் ஒருங்கிணைப்பாளர் தவ்பீக், பேராசிரியர் ஆஷிக், உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.கலைச்செல்வி, என்.சரவணன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தீர்மானம் நீண்ட காலமாக சிறையில் வாடும் சிறுபான்மையின மக்கள், இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும். மோடி அரசால் நிறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும். பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் யுத்தத்தை உடனே நிறுத்த வேண்டும். தலித் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு, நிறுத்தப்பட்ட கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  புதிய நிர்வாகிகள்  மாநாட்டில் மாவட்டத் தலைவராக பி.எம்.காதர் உசேன், மாவட்டச் செயலாளராக என்.குருசாமி, மாவட்டப் பொருளாளராக ஹெச்.அப்துல் நசீர், துணைத் தலைவர்களாக  பி.செந்தில்குமார்,  எஸ்.ஞானமாணிக்கம், ஜாகிர் உசேன், கோஸ்கனி, டேவிட் துரை, துணைச் செயலாளர்களாக ஏ.ஆர்.ஷேக் அலாவுதீன், வியாகுலதாஸ், ஷேக் முகம்மது மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக, மாநகர துணைத் தலைவர் என்.குருசாமி நன்றி கூறினார்.
Tags:    

Similar News