கல்குவாரியை தடை செய்ய வலியுறுத்தல் : கிராம மக்கள் முற்றுகை

சாத்தான்குளம் அருகே கல்குவாரியை தடை செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் கிராம மக்கள் குவிந்து புகார் மனு கொடுத்தனர்.

Update: 2024-05-09 06:31 GMT

சாத்தான்குளம் அருகே கல்குவாரியை தடை செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் கிராம மக்கள் குவிந்து புகார் மனு கொடுத்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்தவர் மாடசாமி ( 47). இவர், கடந்த மாதம் அதே பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்குவாரி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தார். இந்த நிலையில் கல்குவாரி உரிமையாளர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், மாடசாமி பணம் கேட்டு மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த மாடசாமி மற்றும் நெடுங்குளம் கிராமமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு திரண்டு சென்றனர்.

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரனிடம், மாடசாமி மீது கல்குவாரி உரிமையாளர் பொய்யான புகார் தெரிவித்துள்ளார். அவரது மனுவை நிராகரிக்க வேண்டும். கல்குவாரியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர். இதுகுறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்தார்.அப்போது, கல்குவாரியை தடை செய்ய வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக நெடுங்குளம் கிராம மக்களிடம் கையெழுத்து வாங்கி புகார் அளித்தால், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் மனுவை கொடுத்து விட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News