கடந்தாண்டை விட டெங்கு பாதிப்பு குறைவு - சென்னை மேயர் பிரியா

நடப்பாண்டில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-06 07:45 GMT

சென்னையில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் கொசு உற்பத்தியாவதை தடுக்க ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் கொண்டு மருந்து தெளிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் மழை நீர் வடிகால் பகுதிகளில் கால்வாய்களில் தொடர்ந்து கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

கொசு தொல்லை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில் கொசு ஒழிப்பு பணிகள் வீடு வீடாகவும், நீர்நிலைகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு , மலேரியா பரவலை கட்டுப்படுத்தவும், கொசு உற்பத்தியை தடுக்கவும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 31 டெங்கு பாதிப்பு இருந்தது, இந்த ஆண்டு 18 பேர் பாதிப்படைந்துள்ளனர், நடப்பாண்டில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைந்துள்ளது.

குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள், உள்ளிட்ட பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் சூழல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது, தேர்தலுக்கு பிறகு மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News