தர்மபுரி : லோகோ பைலட் காப்பாற்றிய வாலிபர் உயிரிழப்பு
மொரப்பூர் அருகே ரயிலில் அடிபட்டு தண்டவாள பகுதியில் உயிருக்கு போராடிய வாலிபரை மற்றொரு ரயிலின் லோகோ பைலட் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டை- ஈரோடு பாசஞ்சர் ரயில் (06845) தினமும் சேலம் வழியே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் காலை 6.40 மணியளவில் தொட்டம்பட்டி ரயில்வே நிலையத்தை கடந்து மொரப்பூர் ரயில்வே நிலையத்தை நோக்கி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த வழியில் தண்டவாளம் அருகே, ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த ஜோலார்பேட்டை ஈரோடு ரயிலின் லோகோ பைலட் அருண்குமார் (37), உடனே ரயிலை நடுவழியில் நிறுத்தினார். தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு ரயிலில் ஏற்றி மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்தார். பிறகு ரயில்வே பாதுகாப்பு படை காவலர் வெங்கடாசலம் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சேலம் ரயில்வே போலீஸ் எஸ்ஐ கோபண்ணா தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அதில், தலையில் காயமடைந்து தண்டவாளம் அருகே கிடந்தவர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள கீரனூர் ஆணைச்சேரியை சேர்ந்த கர்ணன் மகன் சதீஷ் (30) என்பதும், இவர் தனது பெற்றோருடன் கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள தெற்கு பில்லா நகர் பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. சதீஷ் மனைவி முனீஸ்வரி, சென்னையில் உள்ள தனது தாய் வீட்டில் பிரசவத்திற்காக சென்று வசிக்கிறார். அவரை பார்க்க எர்ணாகுளத்தில் இருந்து ரயிலில் சென்னைக்கு செல்லும் போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கிடந்தது. தெரியவந்தது. இதனிடையே தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி முனீஸ்வரிக்கு தகவல் கொடுத்தனர். 7 மாத கர்ப்பிணியான அவர், தனது 5 வயது பெண் குழந்தை மற்றும் உறவினர்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு கணவர் சதீஷ் உடலை பார்த்து கதறி துடித்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் சேலம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் ராமநாதபுரம் எடுத்துச் சென்றனர். தண்டவாளம் அருகே உயிருக்கு போராடிய வாலிபரை லோகோ பைலட் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.