தீரன் சின்னமலையின் 268 -ஆம் பிறந்தநாள்: அன்புமணி ராமதாஸ் புகழாரம்
தீரன் சின்னமலையின் 268 -ஆம் பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் புகழாரம் செய்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த, வீரத்தின் விளைநிலம் என்று போற்றப்பட்ட, கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 268-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம். தீரன் சின்னமலைக்கு என தனி வீரவரலாறு உண்டு. 1756ம் ஆண்டு இதே நாளில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் சென்னிமலை அருகிலுள்ள செ. மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்தினசாமி-பெரியாத்தா தம்பதிக்கு மகனாக பிறந்தவர்தான் தீரன் சின்னமலை. அவரது இயற்பெயர் தீர்க்கரிசி சர்க்கரை. கொங்கு நாட்டின் வரிகள் அனைத்தும் மைசூர் அரசுக்கு செல்வதை பொறுக்காத தீர்க்கதரிசி சர்க்கரை, ஒருநாள் அந்த வரிப்பணத்தை சிறைபிடித்து அங்கிருந்த ஏழைகளுக்கு பிரித்து கொடுத்தார். அதுமட்டுமின்றி, மைசூருக்கு வரி பணத்தை வசூலித்து செல்லும் அரச பிரதிநிதியிடம், வரிப்பணத்தை சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் ஒரு சின்னமலை பறித்து விட்டதாக போய் உன் அரசிடம் சொல் என்று மிரட்டி அனுப்பினார்.
அன்றிலிருந்துதான் அவர் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டார். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டுவதை அடியோடு எதிர்த்த ஒரு சில வீரதீர மன்னர்களில் தீரன் சின்னமலையும் ஒருவர். குறிப்பாக கேரளம் மற்றும் சேலம் பகுதிகளில் ஆங்கிலேயே படை ஒன்று சேராமல் பார்த்துக்கொண்டதில் இவருக்கு பெரும் பங்குண்டு. அதே சமயத்தில் ஆங்கிலேயர்களை தீவிரமாக எதிர்த்த திப்புசுல்தானின் வீரம் தீரன் சின்னமலைக்கு பிடித்துப் போனது. அதனால், திப்புசுல்தானுடன் கைக்கோர்த்து, கொங்குப்படையை சீரங்கப்பட்டினம் உள்ளிட்ட அதனை சுற்றி நடந்த போர்களுக்கு வழிநடத்தி சென்று திப்பு சுல்தானின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் தீரன் சின்னமலை. தீரன் சின்னமலையின் இந்த வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். அதற்காக இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்!