தேவர் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் தான் பெறுவார்- செல்லூர் ராஜு
தேவர் தங்க கவசத்தை அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்று அதன் வாரிசுதாரர்களிடம் ஒப்படைப்பார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மருது சகோதரர்களின் 222 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையம் அருகே ஸ்காட் ரோடு பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்து போரிட்ட மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளோம். முன்னதாக மதுரையில் இருக்கக்கூடிய மருது பாண்டியர்களின் சிலைக்கு தற்போது மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளோம். தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரைக்கு வந்து மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் செல்ல உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மதுரை விரகனூர் சுற்றுச்சாலை பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளோம். இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளோம் என்றார். மேலும்,அதிமுக காலகட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கக்கூடிய தங்க கவசத்தை நீதி அரசர்கள் தீர்ப்பின்படி இந்த ஆண்டு அதிமுகவின் பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முறைப்படி பெற்று அதன் வாரிசுதாரர்களிடம் ஒப்படைப்பார்.ஒவ்வொரு ஆண்டும் மதுரை அண்ணாநகரில் வங்கி லாக்கரில் பாதுகாக்கப்படும் தேவர் தங்க கவசத்தை பெற்று வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம்அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் அதேபோன்று நடைபெறும் என்றார்.