சீன காய்கறிகள் நேரடி கொள்முதல் - விவசாயிகள் வரவேற்பு

நீலகிரி மாவட்டத்தில் விளையும் சீன வகை காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள பசுமை பண்ணைகளில் விற்பனை செய்ய, அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Update: 2024-07-05 06:10 GMT

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக கோத்தகிரி, குந்தா, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள விவசாயிகள் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் போன்ற ஆங்கில காய்கறிகளை அதிக அளவில் பயிரிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சூப் மற்றும் துரித வகை உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய காய்கறிகளாக இடம் பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே விளைவிக்கக் கூடிய புரோக்கோலி, சுகினி, ஐஸ்பெர்க், பிரஸ்ஸல்ஸ், செலரி, பார்செலி போன்ற சீன காய்கறிகளுக்கு சென்னை மாநகர பகுதிகளில் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய சீன காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யுமாறு நீலகிரி கூட்டுறவு சங்கத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக நீலகிரியில் சாகுபடி செய்யப்படும் சீன காய்கறிகளை நீலகிரி சந்தைகளில் உள்ள வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, வெளி சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு போதிய அளவு லாபம் கிடைப்பதில்லை

. இதன் காரணமாக சீன காய்கறிகளை உள்ளூர் ஏலம் மையத்தில் விற்பனை செய்யும் விவசாயிகளிடமிருந்து நீலகிரி கூட்டுறவு சங்கத்தினர் நேரடியாக கொள்முதல் செய்து இரண்டு முதல் நான்கு டன் என கொள்ளளவுக்கு குளிர் பதன வசதியுடன் வாகனங்கள் மூலம் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பண்ணை பசுமை கடைகள் வாயிலாக கூட்டுறவுத்துறை இத்திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதுடன் மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ள இந்த திட்டத்திற்கு உள்ளுர் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



Tags:    

Similar News