ஒன்றிய அரசு அறிவித்த பேரிடர் நிவாரணத்தால் ஏமாற்றம் -தொல். திருமாவளவன்

ஒன்றிய அரசிடம் தமிழக முதல்வர் ரூ.5 ஆயிரம் கோடி பேரிடர் நிவாரணம் கோரியிருந்த நிலையில் ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது ஏமாற்றமளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

Update: 2023-12-11 02:27 GMT
திருமாவளவன்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் நடைபெற்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டலக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'வெல்லும் ஜனநாயகம்' மாநாடு புயல், மழை காரணமாக பத்துக்கும் அதிகமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், டிசம்பர் 29 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இதில், தமிழக முதல்வர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.

மக்களவையில் ஒன்றிய அரசை அதானி சர்க்கார் என்றும், மோடிக்கும், அதானிக்கும் இடையேயான அரசியல் மற்றும் வர்த்தக உறவை அவ்வப்போது அம்பலப்படுத்தியும் மக்களவையில் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மஹூவா மொய்த்ராவை விசாரணை என்ற பெயரில் பதவி நீக்கம் பழிவாங்கியிருக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது. அண்மையில் ஏற்பட்ட மழை, புயல் பேரிடரால் 10 மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அல்லல்படுகின்றனர்.

அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மழை தொடங்கிய நாளிலிருந்து மக்களுக்கு களத்தில் நின்று உதவி செய்கின்றனர்.  இந்த வெள்ள நிவாரணத்துக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மீட்புப் பணிகள் ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.  தங்களால் இயன்ற அளவுக்கு அரசு மக்களுக்கு உரிய நிவாரணங்களைச் செய்து வருகிறது. அரசு செய்து வரும் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தருவதுதான் இயல்புநிலை திரும்புவதற்கு ஏதுவாக இருக்கும்.

தமிழக முதல்வர் ரூ.5 ஆயிரம் கோடி பேரிடர் நிவாரணம் கோரியிருந்த நிலையில், ஒன்றிய அரசு ரூ. ஆயிரம் கோடி மட்டுமே வழங்கியுள்ளது. ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. ஒன்றிய அரசுடன் அதிமுகவினர் நட்புறவு இருப்பதால், அவர்கள் பிரதமரை வலியுறுத்தி ரூ. 5 ஆயிரம் கோடி பெறுவதற்கு ஆதரவு பெற முன்வர வேண்டும். அவ்வாறு வந்தால் இன்னும் நிவாரணம் வழங்க ஏதுவாக இருக்கும். மழை நீர் வடிகால் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் 50 விழுக்காடுக்கும் அதிகமான பணிகளை முடித்திருப்பதாகத் தெரிய வருகிறது. எஞ்சிய பணிகள் விரைவில் முடிக்கப்படும். இது தொடர்பாக அவசியம் என்றால் வெள்ளை அறிக்கை வெளியிடலாம்.  இத்திட்டத்தில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது அவசியமானது தான்" இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News