DMK vs ADMK: எதிரிகளாக இருந்த திமுக - அதிமுக பாஜகவால் பங்காளியாக மாறிய கதை!

வேடிக்கை என்றால் அதிமுகவை பங்காளி என்ற திமுக, பாஜகவை பகையாளியாக பார்த்து தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.

Update: 2024-02-16 08:25 GMT

பாஜகவை எதிர்க்கும் திமுக, அதிமுக

பாஜக தமிழகத்தில் காலூன்றினால் 3வது கட்சியாக மாறிவிடுவோம் என்ற அச்சத்தில் அதிமுகவும், தனக்கு பிரதான எதிர்க்கட்சியாக வந்துவிட கூடாது என்ற எண்ணத்தில் திமுகவும் பாஜவை எதிர்த்து நிற்கின்றன. இதில், வேடிக்கை என்றால் அதிமுகவை பங்காளி என்ற திமுக, பாஜகவை பகையாளியாக பார்த்து தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.

ஏற்கெனவே இரண்டு முறை ஆட்சியை பிடித்துள்ள பாஜக மூன்றாவது முறையாக மக்களவை தேர்தலில் வெற்றிப்பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரம் காட்டி வருகிறது. வடமாநிலங்களில் பாஜவால் எளிமையாக வெற்றிப்பெறும் நிலையில் தென் மாநிலங்கள் மட்டும் வெற்றி என்பது பாஜகவுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் தற்போது நடைபெற உள்ள லோக் சபா தேர்தலில் பாஜகவின் முக்கிய டார்கெட் தென்மாநிலங்களை நோக்கியே உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பாஜக வலுவாக காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

அதனால், பாஜக மாநில தலைவர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர். முதலில் தமிழிசை சௌந்தராஜன் பாஜக மாநில தலைவராக இருந்தார். பின்னர் எல் முருகன் இருந்தார். அவரையும் ஓரங்கட்டி விட்டு தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அண்ணாமலையை மாநில தலைவராக நியமித்த பாஜக தலைமை அவரை வைத்து காய் நகர்த்தி வருகிறது. அண்ணாமலை பாஜக மாநில தலைவரானதில் இருந்து பல்வேறு கருத்துகளை பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். எதிரியான திமுகவை விமர்சித்தத்துடன், கூட்டணியில் இருந்த அதிமுக தலைவர்களையும் விமரிசித்து டிரெண்டிங்கில் இடம்பெற்றார் அண்ணாமலை. பாஜக தேசிய தலைமையின் பார்வை அண்ணாமலை மீது விழ, அடிக்கடி பிரதமர் மோடி, ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரின் விசிட்டும் தமிழகம் பக்கம் இருந்து வருகிறது.

இப்படி கடந்த சில மாதங்களிலேயே பாஜக தமிழகத்தில் வளர்ச்சி கண்டு வருவது அதிமுக மற்றும் திமுகவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனதுக்கு பிரதான கட்சியாக பாஜக வந்துவிடுமோ என்ற கலக்கத்தில் திமுகவும், தன்னை பின்னுக்கு தள்ளி பாஜக முந்தி கொள்ளுமோ என்ற அச்சத்தில் அதிமுகவும் உள்ளன. இதனால், எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல் எளியும், பூனையுமாக இருந்த திமுக, அதிமுக தலைமை பாஜக விஷியத்தில் நண்பர்களாக செயல்படுகின்றனர் என்றே கூறப்படுகிறது.

உதாரணமாக, பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று திட்டவட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அதேநேரம், பாஜகவை வீழ்த்த ‘இந்தியா’ கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். இருவரின் மென்மை போக்கு அண்மையில் நடந்து கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது தமிழக சட்டமன்றத்தில், எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற வகையில், எடப்படி பழனிச்சாமிக்கு பக்கத்து இருக்கையை ஓபிஎஸ்ஸிடம் இருந்து மாற்றி, ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக அதிமுக தரப்பு கோரி வைத்து வந்தது. அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போதைய கூட்டத்தொடரில் கடந்த 13-ம் தேதி பேசிய எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை பற்றி பேசினார், அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் எழுந்து, ”எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார். அவரது கோரிக்கையை மறுபரிசீலனை செய்து, அதற்கு ஆவன செய்யுமாறு தங்களிடம் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று சபாநாயகர் அப்பாவுவிட தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாளே, பேரவையின் இருக்கைகள் மாற்றப்பட்டன. எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகே துணை தலைவரான ஆர்.பி.உதயகுமார் அமர வைக்கப்பட்டார். அந்த இடத்தில் ஏற்கெனவே அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்குக்கு மதிப்பு குறைய காரணம் பாஜக என்றே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில், “நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் நிச்சயம் வெற்றி பெறும். மோடி 3வது முறையாக பிரதமராக வருவார். நாங்கள் பாஜக கூட்டணியில் தான் இருக்கிறோம்’” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அதிமுகவின் தனது பலத்தை மீண்டும் பெற பாஜவை நாடி இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிராக திரும்பியுள்ளனர்.

இதேபோல் கடந்த 14ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு தீர்மானங்களை கொண்டு வந்தார். அந்த தீர்மானங்களை ஆதரித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு கொண்டு வரும் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றால் மட்டுமே அதிமுகவின் ஆதவு மத்திய அரசுக்கு இருக்கும் என்றார்.

முன்பு ஒருமுறை திமுக தரப்பில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ”பாஜகவை தமிழகத்துக்குள் வரவிடக் கூடாது. அதிமுக நமக்கு பங்காளி, பாஜக பகையாளி” என்று பேசினார். அதற்கு ஏற்றார் போல் பங்காளிக்கு விட்டுக் கொடுத்தாலும் விட்டுக் கொடுப்போம் பகையாளிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற வகையில் பாஜகவுக்கு எதிராகவும், அந்த கட்சியை ஆதரிப்பவர்களுக்கு எதிராகவும் திமுகவும், அதிமுகவும் செயல்பட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News