மீண்டும் சிக்கிய திமுக நிர்வாகி - ராதிகா சரத்குமார் ஆவேசம்.....
சென்னை கொடுங்கையூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராதிகா சரத்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் திமுக மேடை பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ குறித்து சர்ச்சையான வகையில் பேசி இருந்தார். அவருடைய இந்த அவதூறு பேச்சு இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
பின்னர் அவர் ஜாமினில் வெளிவந்த போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் மீண்டும் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டார். சமீபத்தில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் ராதிகா சரத்குமார் குறித்து சர்ச்சையாக பேசியது இணைய தளத்தில் வெளியாகி வந்தது.
இதற்கு நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் குஷ்பூ தங்களது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அதில் சிறைக்கு சென்றும் அவர் திருந்தவில்லை இவரைப் போன்ற ஆட்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசிய விவகாரத்தில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ராதிகா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.