மாா்ச் 22-இல் திருச்சியில் திமுக பொதுக்கூட்டம்
முதல்வருடன் கூட்டணி கட்சித் தலைவா்களும் பங்கேற்பு: அமைச்சா் கே.என். நேரு
By : King News 24x7
Update: 2024-03-20 05:07 GMT
திருச்சியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) நடைபெறும் திமுகவின் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வருடன், கூட்டணி கட்சித் தலைவா்களும் பங்கேற்கவுள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு தெரிவித்தாா். தமிழகத்தில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் பொதுக்கூட்டத்துக்கான இடம் 20 ஏக்கரில் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரமாண்ட பந்தலுடன், மேடை அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை தொடங்குகிறாா். சிறுகனூரில் வெள்ளிக்கிழமை மாலை இந்தப் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில், திருச்சி, பெரம்பலூா் மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளா்களை அறிமுகம் செய்து மக்களிடையே வாக்குகள் கேட்டு பேசுகிறாா். முதல்வருடன், கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களும் மேடையில் பங்கேற்பா். திருச்சியில் நடைபெறும் கூட்டம்தான் மக்களவைத் தோ்தல் வெற்றிக்கான அறிகுறியாகும். வெற்றிக்கான தொடக்கமாகவும், திருச்சியில் முதல் கூட்டம் நடைபெறுவதும் திமுகவினரை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது என்றாா் அவா்.