நாங்கள் தான் வெற்றி பெற போகிறோம் - ஆர்.எஸ்.பாரதி
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற உள்ளதால் எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் திமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஆர். எஸ்.பாரதி, வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் செயல்படுவது குறித்து பயிற்சி அளித்தது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். மேலும் மோடியின் தியானம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, தபால் வாக்குகள் எண்ணுவது குறித்து திமுக அளித்த புகாரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், மோடியின் தியானம் எந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெறாத நிகழ்வு என்றும் நாங்கள் தான் வெற்றி பெறப் போகிறோம் என்பதால் என்ன வேண்டுமானாலும் வாக்கு எண்ணிக்கையின் போது நடைபெறலாம் என்றும் குறிப்பிட்டார். எனவே, எங்கள் வெற்றியை யாரும் பறித்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும் மேலும் எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.