தி.மு.க., அரசு பழங்குடியின மக்களை வஞ்சிக்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்தை ஆளும் திமுக அரசு பழங்குடியின மக்களை வஞ்சிப்பதாகவும், 35 பேர் கொண்ட தமிழக அமைச்சரவையில் ஒரு பழங்குடியினர் கூட இல்லை எனவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் என் மண் என் மக்கள் பாத யாத்திரை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நேற்று துவக்கினார். சேந்தமங்கலம் யூனியன் அலுவலகத்திலிருந்து பாத யாத்திரை தொடங்கினார். மேற்கு கடை வீதி, ஓம் சக்தி கோயில் வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், நாமக்கல், சேலம் சாலையில் உள்ள முத்து மெஸ் அருகில் பாத யாத்திரை நிறைவடைந்தது. கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் முருகன், மாநில துணைத்தலைவர்கள் துரைசாமி ராமலிங்கம், ஒன்றிய தலைவர் பாண்டியன், ஓ.பி.சி., தலைவர் கணபதி, துணைத் தலைவர் குமார், பொருளாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது. தமிழகத்தை ஆளும் திமுக அரசு பழங்குடியின மக்களை வஞ்சிப்பதாகவும், இதற்கு உதாரணமாக 35 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரு பழங்குடியினர் கூட இல்லை எனவும், பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மத்திய அரசு நடத்தும் ஏகாலைவா பள்ளியில் படித்த 15 பழங்குடியின மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேர்ந்துள்ளனர். மக்களை சார்ந்த எந்த வளர்ச்சியும் இல்லை என்றும், தலைநகரை சார்ந்து தான் தி.மு.க., ஆட்சி உள்ளதாகவும், தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்ன நிலையில், ஆட்சிக்கு வந்து 30 மாதங்களில் 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பை வழங்கி இளைஞர்களை ஏமாற்றி விட்டதாகவும், முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு தான் வேலைவாய்ப்பை வழங்கி உள்ளதாகவும், மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என கூறியிருந்த நிலையில் இதுவரை 9 லட்சம் பேருக்கு வேலை வழங்கி உள்ளார். ஏழைகளுக்கு வரவேண்டிய பணத்தை கொள்ளை அடிப்பதையே தி.மு.க., அமைச்சர்கள் கொள்கையாக வைத்துள்ளனர். ஆனால் மோடி அரசு ஏழை மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. 3வது முறையாக மோடி ஆட்சி அமைக்கவும் அனைத்து பகுதி மக்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க பா.ஜ.,விற்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் ஜனநாயகம் முழுவதுமாக புறக்கணிக்கப்படுகிறது. சாதாரன மக்களுக்கு இந்த ஆட்சி நடக்கவில்லை. மத்திய அரசு பழங்குடியின மக்கள் குழந்தைகளுக்கு கடந்த 8 ஆண்டில் பிரி மெட்ரிக் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 20 கோடியும், போஸ்ட் மெட்ரிக் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 226 கோடி வழங்கியுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் 8 ஏகாலைவா பள்ளியில் பழங்குடியின குழந்தைகள் 2488 பேர் படித்து வருகின்றனர். தீவிரவாத அமைப்பை தி.மு.க., அரசு ஆதரித்து வருகிறது. கோவையில் சிலிண்டர் வெடித்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த மண்ணில் தீவிரவாதம் வளர்ந்து வருவதாகவும், அதே போல் கேரளாவில் குண்டுவெடிப்பு நிகழ்த்துள்ளது. அங்கும் தீவிரவாதம் தலை தூக்கி உள்ளது. இளைஞர்களுக்கு எதிராக தி.மு.க., ஆட்சி இருக்கிறது. அரசு வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.