அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டும் தான்- எஸ்.பி.வேலுமணி
அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டும்தான், திமுக -பாஜகவிற்கு இடையே தான் போட்டி என்று சொல்வதை கேட்டு கட்சியினர் சோர்வாகிவிட கூடாது, கூட்டணியை பொதுசெயலாளர் பார்த்து கொள்வார். நமக்கு எதிரி திமுக மட்டுமே என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து வரும் 9 ம் தேதி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார்,ஜெயராம்,அமுல் கந்தசாமி,செல்வராஜ்,தமோதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.ஜி.ஆரை பற்றி மோசமான வார்த்தையில் ஆ.ராசா விமர்சித்துள்ளார் எனவும்,ஜெ பிறந்தநாள் 24 ம் தேதி நடைபெறுகின்றது தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவது ஆகிய இந்த 3 விவகாரம் குறித்து ஆலோசிக்க கூடியுள்ளோம் என தெரிவித்தார். அவினாசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிகமான கூட்டத்தை சேர்க்க வேண்டும் எனவும் ஆ.ராசா முன்பு எடப்பாடியாரின் தாயாரை விமர்சித்த நிலையில் தற்போது எம்.ஜி.ஆரையும் விமர்சித்துள்ளார் என்றவர் ஆ.ராசாவை திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வர காரணம் எம்.ஜி.ஆர் எனவும் ஒப்பற்ற தலைவராக இருந்த எம்.ஜி.ஆரை இப்படி பேசிய ஆ.ராசாவை திமுக தலைமை ஆ.ராசாவை கண்டித்து இருக்க வேண்டும் என்றவர் இதற்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.நீலகிரி பாராளுமன்ற தொகுதியில்தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்பதால் அவனாசியில் ஆர்ப்பாட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நடத்துகிறார் எனவும் லட்சகணக்கான தொண்டர்களை இதில் இணைத்து போராட்டம் நடத்த இருப்பதாகவும் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் எந்த திட்டத்தையும் செய்யாத ஆட்சி திமுக ஆட்சி எனவும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவுடன் கூட்டணிக்கு வரவில்லை என புரளி கிளப்பி கொண்டே இருப்பார்கள் என தெரிவித்த அவர் திமுகவிற்கு ஓட்டு போட யாரும் தயாராக இல்லை எனவும் அதிகமான அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள் என தெரிவித்தார்.அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டும்தான் எனவும் திமுக -பாஜகவிற்கு இடையே தான் போட்டி என்று சொல்வதை கேட்டு கட்சியினர் சோர்வாகிவிட கூடாது எனவும் கூட்டணியை பொதுசெயலாளர் பார்த்து கொள்வார் என்றவர் நமக்கு எதிரி திமுக மட்டுமே என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.