திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவிற்கு தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கல்
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், விக்கிரவாண்டித் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் புகழேந்தி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் .மேலும் x-தள பதிவில், அவர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.கழகப்பணி, மக்கள் பணி இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஆற்றல் மிகு செயல்வீரர் புகழேந்தி அவர்களை, இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழகத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார் .
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் புகழேந்தி. 71 வயதான இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் இரண்டு வாரங்கள் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடித்த அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று விக்கிரவாண்டி அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது மேடையிலேயே புகழேந்தி மயங்கி விழுந்த நிலையில், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட புகழேந்திக்கு ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. புகழேந்தி கல்லீரல் புற்றுநோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், புகழேந்திக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் இருந்து மருத்துவக்குழு விரைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்தது. இதன் காரணமாக மருத்துவமனை முன்பு திமுகவினர் திரளானோர் கூடினர். காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உயிர் இன்று காலை பிரிந்தது. தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் விழுப்புரம் சென்று புகழேந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.