டாக்டரை கத்தியால் குத்திய விவகாரம்: கமிஷனரிடம் மனு
டாக்டரை கத்தியால் குத்திய விவகாரத்தில் பாதுகாப்பு கோரி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மனநல மருத்துவர் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், சேலத்தில் சிகிச்சை சரியாக அளிக்கவில்லை என கூறி மனநல மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவர்கள் மக்களுக்காக சேவை அளிக்க கூடியவர்கள்.
அவர்கள் மீது யாரும் வெறுப்புகளை காட்ட வேண்டாம். சேலத்தில் தாக்கப்பட்ட மருத்துவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது கடும் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். இனிமேல்
இது போன்று யாரும் செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.