நாக்பூரை தலைநகராக்க முயற்சிப்பதை அனுமதிக்காதீர் - கமலஹாசன்

நாட்டின் தலைநகர் நாக்பூராக இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். இந்தியா ஒரே மதமுள்ள நாடாக இருக்க வேண்டும். இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். புராணமே சரித்திரமாக வேண்டும். அனைத்து தொழில்களும் சிறு குழுவுக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். இவை நிறைவேறினால், நாம் அனைவரும் தெருவில்தான் நிற்க வேண்டியிருக்கும். இதை அனுமதித்து விடாதீர்கள். என பிரசாரத்தின் போது கமல்ஹாசன் பேசினார்.

Update: 2024-04-08 06:46 GMT

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் (கரூர் வைஸ்யா வங்கி அருகில்) பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 16 வயதில் அரசியலுக்கு வந்து, 67 ஆண்டுகளாக மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளார். மத்திய அமைச்சராக இவர் தமிழ்நாட்டுக்காக செயல்படுத்திய திட்டங்கள் அநேகம். அதேபோல, நான் இங்கே வந்திருப்பதும் என் கடமையைச் செய்வதற்காகத்தான். எனக்கென்று எதுவும் கேட்க வரவில்லை. நமக்கு நல்ல காலம் பிறக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன்.

தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு சில தொகுதிகள் வாங்கியிருக்கலாமே என்றனர். வேண்டாம். இந்த அவசரக் காலத்தில், அதைப்பற்றி எல்லாம் யோசிக்கக் கூடாது. நான் செய்தது தியாகம் அல்ல, நம் அனைவரின் எதிர்காலத்துக்காக மேற்கொண்ட வியூகம். தமிழ்நாட்டில் எத்தனை எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் டைடல் பார்க், மெட்ரோ, அண்ணா மேம்பாலம், கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, அண்ணா நூலகம் இப்படி பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அண்ணா நூலகம் என்றவுடன், என் நினைவுக்கு வந்தது, அதற்கான முட்டுக்கட்டைகள்தான்.

ஒரு அரசு நல்ல திட்டம் போட்டால், அடுத்து வரும் அரசு அதை நடக்கவிடாமல் செய்வது நாட்டுக்கு நல்லதல்ல. உலகத் தரத்தில் கட்டப்பட்ட நூலகத்துக்கு உள்ளேபோகக் கூட அனுமதி கேட்டுத்தான் போக வேண்டும் என்று சிக்கல் உண்டாக்கியது சரியல்ல. தமிழ்நாட்டில் இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்தலாம். ஆனால், செய்ய விடாமல் தடுப்பது ஒன்றிய அரசுதான். பல திட்டங்களை செயல்படுத்த முற்படும்போது, அதைத் தடுத்து விடுகிறார்கள். உதாரணத்துக்கு, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம். ஏறத்தாழ ரூ.68,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தக்கு, ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி மத்திய அரசு பாதி தொகையான ரூ.34,000 கோடியை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், எந்த தொகையும் வழங்கவில்லை. ஆனால், `நமக்கு நாமே' என்று முடிவு செய்துகொண்டு, ரூ.68,000 கோடி சுமையை தமிழகமே ஏற்றுக்கொண்டு, திட்டத்தைத் தொடங்கிவிட்டார்கள்.

இதுபோல பல திட்டங்களை ஒன்றிய அரசு முடக்கப் பார்த்தாலும், தமிழக அரசு முன்னெடுத்திருக்கிறது. தமிழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, மக்களைப் பார்க்க பிரதமர் வரவில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் 8 முறை வருகிறார். இதுதான் தலைவனுக்கான லட்சணமா? வெள்ளம் வந்தபோது குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் கோடி நிவாரணம் தமிழக அரசு கேட்டது. ஒரு ரூபாய் கூட தரவில்லை. அவசரத் தேவைக்கு உதவாத அரசு, நல்ல அரசு அல்ல. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறு வயதிலேயே சர்வாதிகாரத்தை எதிர்க்கத் துணிந்து, சிறைக்குச் சென்றவர். இப்போதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்.

மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. அன்னதானம் செய்வதைக் காட்டிலும், கல்வி கொடுப்பது சிறந்தது என்பார்கள். ஆனால், தமிழக முதல்வர் அன்னதானமும் கொடுத்து, கல்வியும் கொடுக்கிறார். அவரது மகன் உதயநிதி, அனைத்துத் தரப்பு மாணவ, மாணவிகள், இளைஞர்கள் ஆகியோர் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறும் வகையில், சர்வதேசத் தரத்திலான விளையாட்டு மைதானங்கள், உபகரணங்களைக் கொண்டு வருகிறார். அனைத்து வீரர், வீராங்கனைகளையும் ஊக்குவிக்க உதவுகிறார். இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 திட்டத்தை முதலில் உரைத்தது மக்கள் நீதி மய்யம் என்றாலும், அதைச் செயல்படுத்தியது திமுக அரசுதான். அதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன் என்றால், அது மிகையாகாது.

இன்னும் மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் என பல திட்டங்கள். ஆனால், திராவிட மாடலை கிண்டல் செய்கிறார்கள். உண்மையில் திராவிட மாடல் என்பது நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய மாடல். திராவிடம் என்பது நாடு தழுவியது. மேலும், அது நிரூபிக்கப்பட்டது. திராவிட நிறம், முகம், தோலுடன் இந்தியா முழுவதும் மக்கள் இருக்கிறார்கள். திராவிடத்தை அழிப்பேன் என்று கூறுவது அசட்டுத்தனம். மக்களை மதியாத மடத்தனம். நல்ல அரசைப் பாராட்ட வேண்டியது நம் கடமை. ஆனால், அடுத்த வாய்ப்புக் கொடுத்தால் தேர்தலே இருக்காது என்ற நம்பிக்கையை உருவாக்குவது நல்ல அரசு அல்ல. தேர்தல் இருக்கும், ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரேயொரு பொத்தான்தான் (பட்டன்) இருக்கும். ஒரே வேட்பாளர்தான் இருப்பார்.

அந்த பட்டனுக்கு மேலே இந்தியில் மட்டுமே எழுதியிருக்கும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ஜிப்பா என்பதுபோல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரேயொரு பட்டன் மட்டுமே இருக்கும். அது மட்டுமல்ல, தேசியக் கொடியிலும் 3 வண்ணங்களுக்குப் பதிலாக, ஒரேயொரு வண்ணம் மட்டுமே இருக்குமாறு செய்துவிடுவார்கள். அதை நான் ஏற்க மாட்டேன். நீங்களும் அனுமதிக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். எனவே, மாற்றத்தை ஏற்படுத்த, டி.ஆர்.பாலுவின் குரலை மீண்டும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யுங்கள். நான் ராகுல் காந்தியின் `பாரத் ஜோடா' யாத்திரையில் பங்கேற்றதில் இருந்து, ஒரே பாதையில்தான் பயணிக்கிறேன். எதை நோக்கிப் பயணிக்கிறேன் என்று மக்கள் தெரிந்திருப்பீர்கள். எத்தனை நடிகர்கள் பாரத் ஜோடாவில் கலந்துகொண்டார்கள்? நடிப்பு என் தொழில், அரசியல் என் கடமை. இரண்டையும் குழப்பத் தேவையில்லை. கடமை வந்ததால், நடிப்பை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். இதை அனைவரும் புரிந்துகொள்ளுங்கள்.

நாடு நலமாக இருக்க வேண்டும் என்றால், யோசித்து வாக்களியுங்கள். டி.ஆர்.பாலுவுக்கு வாக்களியுங்கள் என்று நான் வற்புறுத்துவதற்குக் காரணம், நான் யோசித்துவிட்டேன். இதற்கு முன்னால் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவர் இவர். எனவே, நிச்சயம் நம்பி வாக்களியுங்கள். இன்னும் பல திட்டங்கள் நிறைவேறும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

தொடர்ந்து, அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முகப்பேர் (கலெக்டர் நகர் சிக்னல்) பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார். நல்ல தலைவருக்கு இது அடையாளம். தமிழகத்தில் 1,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தது மட்டுமல்ல, கோயில் சொத்துகளை எல்லாம் மீட்டு, மக்களிடையே கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். அதற்காகவும் அவரைப் பாராட்டுகிறேன். இங்கு இந்தி மொழி இருக்கலாம். ஆனால், தமிழ் வாழ வேண்டும். இந்த முழக்கத்தை சிறு வயது முதலே எழுப்பிக் கொண்டிருக்கிறேன். யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்குமே காணோம் என்று சொல்வதற்காகத்தான் இந்தி மொழி படத்தில் நடித்தேன்.

எங்களுக்குத் தேவை என்றால் 10 மொழிகளைக் கூட கற்போம். ஆனால், எங்கள் மொழியை அழித்துவிட்டு, அடுத்த மொழியைக் கற்க மாட்டோம். நாட்டைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால்தான் கூட்டணிக் கட்சியினரும், மக்கள் நீதி மய்யத்தினரும் இங்கு திரண்டிருக்கிறார்கள். நாடு நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர மக்கள் நீதி மய்யத்தினருக்கு வேறு எண்ணம் கிடையாது. கடந்த 40 ஆண்டுகளாக நற்பணி செய்யும் பழக்கத்தை மட்டுமே அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறேன். அந்தப் பழக்கம் அவர்களை விட்டுப் போகாது. ஜனநாயகம் என்ற நாற்காலியில், அருகதையற்றவர்களை அமரவிடக் கூடாது. ஜனநாயகத்தையே கலைக்க முற்படுகிறார்கள். மூவர்ணக் கொடியை ஒரே வண்ணக் கொடியாக மாற்றும் அவர்களது முயற்சியை மக்கள் நிறைவேற்ற விடமாட்டார்கள்.

குஜராத் மாடல் என்ற பொய்யை, திராவிட மாடல் என்ற உண்மை வென்றுவிடும். தமிழ்நாட்டின் பல திட்டங்களுக்கு ஒன்றிய அரசு என்று பெயர்கொண்ட ஒன்றாத அரசு முட்டுக்கட்டைப் போடுகிறது. எமெர்ஜென்சியின்போது தொடங்கிய போரை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதே திராவிட மாடல். பணக்காரர் சிரிப்பில் மட்டுமே இறைவனைக் காண்பது குஜராத் மாடல். பணக்காரர்கள் சிரிப்பில் இறைவன் தெரியமாட்டார், பல கோடி ஏழைகள்தான் தெரிவார்கள். ஒரே நபருக்கு பல்லாயிரம் கோடி கிடைக்கச் செய்கிறது ஒன்றிய அரசு. ஆனால், தமிழ்நாட்டில் கோடிக் கணக்கான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை தரப்படுகிறது. இப்படி ஏழையின் சிரிப்பில் நாம் இறைவனைப் பார்க்கிறோம். வெளிநாட்டுப் பிரதிநிதிகள், உயர் பதவியில் இருப்பவர்கள் ஆகியோர், ஏழைகளைப் பார்க்காமல் இருக்க. குடிசைகளைத் திரைபோட்டு மறைக்கிறார்கள்.

இந்தியா ஒளிர்கிறது என்று காட்டுவதற்காக, ஏழ்மையை மறைக்கப் பார்க்கிறார்கள். நம் ஏழ்மையை வெளிநாட்டுக்காரன் பார்ப்பது அவமானமாக இருக்கிறதாம். அப்படி அவமானமாக இருந்தால், இங்கு ஏன் வருகிறீர்கள்? நாங்களே எங்களைப் பார்த்துக் கொள்கிறோம். நாடாளுமன்றத்தில் எதிர் குரலே கேட்கக் கூடாது என்று நினைப்பவர்களுக்கு பதிலடியாக, எதிர்த்துப் பேசும் தைரியமான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதற்கு திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். உலகிலேயே அற்புதமான வாஷிங் மிஷனை ஒன்றிய அரசு கண்டுபிடித்து இருக்கிறது. தேர்தல் நன்கொடை கொடுத்தால், எந்த வண்ணமாக இருந்தாலும், அதில் போட்டால் வெள்ளையாக மாறிவிடும். தேர்தல் பத்திரம் சட்டம் போட்டதும் அவர்கள்தான், அதை அனுபவிப்பதும் அவர்கள்தான். நூறு ரூபாய் லாபமீட்டும் நிறுவனம், நன்கொடையாக ரூ.200 கொடுத்தது எப்படி? இதையெல்லாம் மக்கள் சிந்திக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகால மத்திய ஆட்சி டிரெய்லர்தான். இனிமேல் வருவதுதான் `மெயின் பிக்சர்'. பார்க்க சகிக்காது. அதை அனுமதித்துவிடாதீர்கள். நாட்டின் தலைநகர் நாக்பூராக இருக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். இந்தியா ஒரே மதமுள்ள நாடாக இருக்க வேண்டும். இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். புராணமே சரித்திரமாக வேண்டும். அனைத்து தொழில்களும் சிறு குழுவுக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். இவை நிறைவேறினால், நாம் அனைவரும் தெருவில்தான் நிற்க வேண்டியிருக்கும். இதை அனுமதித்து விடாதீர்கள். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Tags:    

Similar News