பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது: எல்.முருகன் வலியுறுத்தல்
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களிடம் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திருச்செந்தூரில் உலக புகழ் பெற்ற கந்த சஷ்டி திருவிழா நடந்து வரும் வேளையில் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டு வரும் நிலையில் தமிழக அரசின் கட்டணக் கொள்ளை பக்தர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்செந்தூரில் எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை, ஏற்கனவே உள்ளது தான் என அமைச்சர் சேகர்பாபு அளிக்கும் விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள். மக்கள் நம்ப தயாரில்லை. திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் கட்டண உயர்வு வசூலை மறைப்பதை நிறுத்தி விட்டு அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் அதை அவர் நிறுத்த முன் வரவேண்டும். அதுமட்டுமின்றி திருச்செந்தூர் கோவிலில் அராஜகமான முறையில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது. தமிழக அரசின் கட்டண உயர்வு வசூலை நிறுத்தக்கோரி முருக பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் திரண்டு அறப்போராட்டம் நடத்தினர். அறவழியில் போராடிய பக்தர்கள் மீது காவல் துறை கடுமையான பலப்பிரயோகத்தை கையாண்டுள்ளது. இதில் சிலர் படுகாயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டண தரிசனத்தை ரத்து செய்யாமல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. இந்து விரோதமாக செயல்படும் தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்து சமய அறநிலையத்துறை உயர்த்தி உள்ள கட்டணங்களை உடனடியாக திரும்ப பெறவேண்டும். எந்த வகையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.