திராவிட கழகத் தலைவர் வீரமணி அறிக்கை

வரலாற்றைப் புரட்டிப் போட்ட தந்தை பெரியார் கண்ட ‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டு விழா தொடக்க நாளை முன்னிட்டு வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-05-03 06:22 GMT

வரலாற்றைப் புரட்டிப் போட்ட தந்தை பெரியார் கண்ட ‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டு விழா தொடக்க நாளை முன்னிட்டு வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘விடுதலை’ நாளேடு அதன் நீட்சியே - எங்கும் கொண்டு செல்வோம் ‘விடுதலை’யை! - ‘விடுதலை’ ஆசிரியர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு, 1925 ஆம் ஆண்டு இதே நாளில்தான் (2.5.1925) தந்தை பெரியாரின் கொள்கைப் போர்வாளான ‘குடிஅரசு’ இதழ் தொடங்கப்பட்டது. தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட ஏடுகள், இதழ்களின் தனித்தன்மை! தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட அத்தனை ஏடுகளும், இதழ்களும் தனித் தமிழில் என்பது ஒருபக்கம்! ஏடுகளின், இதழ்களின் பெயர்களே, அந்த ஏடுகளின் இதழ்களின் இலட்சியத்தை, நோக்கத்தைப் பறைசாற்றுபவை ஆகும். ‘குடிஅரசின்’ நோக்கமென்ன? ‘குடிஅரசு’ இதழின் நோக்கத்தை அதன் தொடக்க நாளில் வெளிவந்த ‘குடிஅரசு’ தலையங்கத்திலேயே (2.5.1925) திட்டவட்டமாக தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘எமது பத்திரிகையின் நோக்கத்தையறிய நமது தாய்நாடு அரசியல் விரும்புவார்க்கு சமூகவியல், ஒழுக்கவியல், பொருளியல், கல்வி இயல் போன்ற முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வது அறிவு வளர்ச்சிக்காக என்று கூறுவோம். அதிகப் பொருள் செலவிட்டு கட்டிய கட்டடம் அஸ்திவாரம் பலத்தோடு இல்லாவிடில் இடிந்து விழுந்து அழிந்து போவதைப்போல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனிதன் குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாலாகிய கிராமம் ஆகிய இவை எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின், அத்தேசம் ஒரு நாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டுமாயின், நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்; ஒவ்வொரு தனிக் குடும்பமும் நந்நிலையடையவேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும்; ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை எந்நாளும் எதிர்பார்த்து நிற்காவண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும். அடிப்படைகளான இவற்றை அறவே விடுத்து, வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று. ஆகவே, இவ்வடிப்படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடையறாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும். மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும்; மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும். உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்து மனிதரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும். சமய சண்டைகள் ஒழியவேண்டும்.’’ என்று முதல் தலையங்கமே குறிப்பிடுகிறது. ‘குடிஅரசு’ என்று குறிப்பிட்டாலும், சுயமரியாதை இயக்கம் என்று குறிப்பிட்டாலும் இரு சொல் ஒரு பொருளேயாகும். ‘‘தோழர்களே! மனிதனுக்கு வெட்கமும், ரோஷமும் ஏற்படுவதற்காகவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே ............. மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் சமூகப் புரட்சியில் ஏற்படவேண்டுமேயொழிய, சிரிப்பு, விளையாட்டால் ஏற்படக்கூடியதல்ல; இதற்காக அனேக தொல்லைகளை அனுபவிக்கவேண்டி வரும்.’’ ‘‘இந்த உலகத்திலுள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு, ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்தாலும், அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய ‘‘சுயமரியாதை’’ என்ற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது’’ என்றார் சுயமரியாதைச் சூரியனாம் தந்தை பெரியார் அவர்கள். விழுப்புண்களை ஏற்ற ‘குடிஅரசு!’ ‘குடிஅரசு’ ஏடு, அது தோற்றுவிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் வெள்ளமாகப் பாய்ந்து, மக்கள் மத்தியில் தன்மான உணர்வையும், பகுத்தறிவு எழுச்சியையும் ஏற்படுத்திவிட்டது. பல விழுப்புண்களையும் மார்பில் ஏற்றதுண்டு. 1933 டிசம்பரில் ‘குடிஅரசு’ இதழில் தந்தை பெரியாரால் எழுதப்பட்ட ‘‘இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழியவேண்டும்?’’ என்னும் ஆசிரியவுரைக்காக அவருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனையும், 300 ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டன. அக்கட்டுரையை வெளியிட்டதற்காக இதழின் வெளியீட்டாளர் எஸ்.ஆர்.கண்ணம்மாவிற்கு ஆறு மாதச் சிறைத் தண்டனையும், 300 ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டன. தண்டத் தொகையைக் கட்டாவிட்டால், மேலுமொரு மாதச் சிறைத்தண்டனையும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், ‘குடிஅரசு’ இதழுக்கும் அச்சகத்திற்கும் பிணையத் தொகையும் கட்டுமாறு அரசால் உத்தரவிடப்பட்டது. இதன் விளைவாக ‘குடிஅரசு’ இதழ் 19.11.1933 ஆம் நாளிட்ட இதழோடு சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. வெள்ளைக்கார ஆட்சியில் நீதிமன்றத்தில் தந்தை பெரியார்! ‘குடிஅரசின்’ மீதான வழக்கில்கூட ஆசிரியர் உரைக்காக தந்தை பெரியார் மீதான வழக்கு விசாரணையின்போதுகூட வழமைபோல் எதிர் வழக்காடாமல், அறிக்கை ஒன்றினை அளித்தார். ‘‘நான் ஏழெட்டு வருட காலமாய், சுயமரியாதைச் சமதர்மப் பிரச்சாரம் செய்து வருகிறேன். சமூக வாழ்விலும், பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழவேண்டும் என்பது அப்பிரச்சாரத்தின் முக்கிய தத்துவமாகும். இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும், அதற்காகப் பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவை இல்லாமல் பிரச்சாரம் செய்வதும் குற்றமாகாது. இந்த நிலையில், சர்க்கார் என்னைத் தண்டித்தாலும் சரி, அல்லது இந்தப் பிராதுக்குப் போதிய ஆதாரமில்லையென்று, நியாயத்தையும், சட்டத்தையும் லட்சியம் செய்து வழக்கைத் தள்ளிவிட்டாலும் சரி, இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப்பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று எந்தக் காரணத்துக்காகக் குற்றஞ்சாட்டி தண்டிக்கப்பட்டாரோ, அந்தக் காரியத்தையும், காரணத்தையும் நீதிமன்றத்தில் வலுவாக நியாயப்படுத்தி, தண்டனைக்கு வரவேற்பு கூறும் தலைவரை உலக வரலாற்றில் எங்குத் தேடினாலும் காண முடியாதே! அவருடைய அத்தகைய உறுதியான இலட்சியப் பண்புக்குக் ‘குடிஅரசு’ ஒரு போர்க் கருவியாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கதாகும். நமக்கு வழிகாட்டும் தலைவரும் - ஏடும்! அய்யாவின் இந்த அறிக்கையின் உள்ளடக்கம் இன்றைக்கும், ஏன், நாளைக்கும்கூட இயக்கத்திற்கும், இயக்கத் தொண்டர்களுக்கும் வழிகாட்டும் திசை விளக்காகும். தந்தை பெரியார் கண்ட அந்தக் ‘குடிஅரசின்’ கோட்பாடுகள் 89 ஆம் ஆண்டில் பயணிக்கும் ‘விடுதலை’ நாளேட்டுக்கும் நூற்றுக்கு நூறும் பொருந்துவதே! இன்றைக்கும் மதவாதம், சமூகநீதிக்கும் எதிர்ப்பு, ஸநாதனம், பெண்ணடிமைத்தனம் கொம்பு முளைத்துக் கிளம்பும் சக்திகள் அரசியல் அதிகாரம் என்ற வாள்களைச் சுழற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அதனை எதிர்கொள்வதும் சுயமரியாதை இயக்கமான திராவிடர் கழகத்திற்கும், ‘குடிஅரசின்’ மறுபெயரான ‘விடுதலை’க்கும் முக்கிய கடமையாகவே உள்ளன. உலகெங்கும் பெரியார்! இன்றைய தினம் இவற்றிற்கான தேவை தமிழ் மண்ணையும் கடந்து இந்தியத் துணைக் கண்டத்திற்கே தேவை என்ற நிலை உணரப்பட்டுவருகிறது. ஸநாதனத்துக்கும் - சமத்துவத்திற்குமான போர்! ஸநாதனத்திற்கும் - சமத்துவத்திற்கும் எதிரான போராக அரசியலாகவும் இருந்து வருகிறது! உலகெங்கும் தந்தை பெரியாரால் பசுமையாக வளர்ந்து வருகிறது. மக்கள் தொகையில் பெரும்பாலரான பார்ப்பனரல்லாதோர் மூளையில் மதம், கடவுளின் பெயரால் படிந்த அழுக்குகளை அகற்றி, புரட்சிகரமான சமத்துவ, சமதர்ம, சுயமரியாதை சமுதாயத்தைப் படைப்போம்! இதனை புதுவிதியாக செய்வோம் - எழுச்சி கொள்ளச் செய்வோம்! வாழ்க பெரியார்! வளர்க ‘குடிஅரசின்’ தத்துவம்! ‘விடுதலை’ ஏட்டை, எங்கெங்கும் கொண்டு சேர்ப்போம்!

Tags:    

Similar News