ஜனாதிபதி நாளை ஊட்டி வருகை: 6 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!!
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நேற்று முதல் 6 நாட்களுக்கு நீலகிரியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் பயணமாக நாளை (புதன்கிழமை) தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்லும் அவர், உள்ள ராஜ்பவனுக்கு சென்று தங்குகிறார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்கிறார். அங்கு போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைக்கிறார். தொடர்ந்து ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகாரிகள் மத்தியில் பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்குகிறார். 29-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் தங்கி ஓய்வெடுக்கும் அவர், 30-ந் தேதி காலை ஹெலிகாப்டர் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளம் வருகிறார். அங்கிருந்து திருவாரூர் செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் திருச்சி விமான நிலையம் வந்து, மீண்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார் வரவழை க்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி, ராணுவ பயிற்சி மையம், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம், ஊட்டி ராஜ்பவன் மாளிகை, திட்டுக்கல்-ராஜ்பவன் மாளிகை சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, குன்னூர் வெலிங்டன் ராணுவ வைக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை, ரோந்து பணிகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படு த்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர். இதுதவிர மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளிலும் ரோந்து, கண்காணிப்பு தீவிரப்படு த்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி வந்திறங்க உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சுழற்றி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று அங்கு ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடந்தது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நேற்று முதல் 6 நாட்களுக்கு நீலகிரியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜனாதிபதி வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா தலைமையில் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும் ஜனாதிபதி வருகையின் போது, காலநிலை மாற்றம் ஏற்பட்டால், ஹெலிகாப்டர் தரையிறங்க மசினகுடியில் உள்ள ஹெலிபேடை பயன்படுத்த முடிவு செய்து, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.