வறட்சி எதிரொலி - மேய்ச்சல் நிலமான நெல் வயல்கள்

திருவையாறு அருகே போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் பயிர்கள் காய்ந்ததால் வேறு வழியின்றி விவசாயிகள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்

Update: 2024-02-12 07:12 GMT

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே தண்ணீர் இல்லாததால் காய்ந்த நெற்பயிர்களை ஆடுகளுக்கு தீவனமாக்கினர். திருவையாறு வட்டாரத்துக்கு உள்பட்ட கீழத் திருப்பூந்துருத்தி, மேலத் திருப்பூந்துருத்தி, காட்டுக்கோட்டை பாதை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடி செய்யப்பட்டது. காவிரி நீர் வரத்து இல்லாததால், அருகிலுள்ள மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீர் பெற்று விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். ஆனால், கடந்த 4 மாதங்களாக காவிரி நீர் வரத்து இல்லாததாலும், ஒரு மாதத்துக்கு மேலாக மழை பெய்யாததாலும் மோட்டார் பம்ப்செட்டுக்கும் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துவிட்டது.

இதனால், ஆற்றுப்பாசனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், வெண்ணாற்றில் மட்டும் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு விடப்பட்டதே தவிர, தஞ்சாவூர் மாவட்டத்துக்குக் விடவில்லை. இதனால், திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப் பாசனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில், இப்பகுதிகளில் கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல், நிலங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு காய்ந்துவிட்டன. இப்பயிர்களை இனிமேல் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால், விவசாயிகள் ஆடுகளை விட்டு மேய்த்தனர்.

இது குறித்து மேலத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தது: மேலத் திருப்பூந்துருத்தி கூடுதல் வருவாய் கிராமத்தில் ஆற்றுப்பாசனத்தைச் சார்ந்த பல ஏக்கரில் அருகிலுள்ள மோட்டார் பம்ப்செட் மூலம் சம்பா சாகுபடி செய்து வந்தோம். பம்ப்செட்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால், எங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், பல ஏக்கரில் நிலங்களில் தண்ணீரின்றி காய்ந்து, வெடிப்பு ஏற்பட்டு பயிர்களும் கருகி வருகின்றன.  இதனால், வேறு வழியின்றி ஆடுகளை விட்டு பயிர்களை அழித்து வருகிறோம். இதுவரை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்து வீணாகிவிட்டதால், மிகுந்த வேதனை அளிக்கிறது. அருகிலுள்ள கருப்பூர், பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதி விவசாயிகளுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அலுவலர்கள்.

Tags:    

Similar News