வனத்தில் வறட்சி : உயிருக்கு போராடும் பெண் யானை
குரும்பூர் வனத்திலிருந்து தண்ணீர் தேடிவெளியே வந்த பெண்யானை குழியில் தவறிவிழுந்து உயிருக்கு போராடி வருகிறது. யானையை மீட்டதும் சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவக்குழு விரைந்தது.
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது கடம்பூர் மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் குளம் குட்டைகளில் நீர் வறண்டு காணப்படுகிறது. இதனால் யானைகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமத்துக்குள் நுழைகின்றன. இந்நிலையில், குரும்பூர் வனத்தில் இருந்து வெளியே வந்த பெண்யானை, கடும் வெயிலில் தண்ணீர் தேடி அலைந்தது. அப்போது பழனிச்சாமி என்பவரின் தோட்டத்தில் தண்ணீர் இருப்பதை கண்டு அங்குள்ள குழியில் இருந்து மேலே ஏறும்போது தவறிவிழுந்தது.
சட்டெரிக்கும் வெயிலில் தற்போது இந்த யானை உயிருக்கு போராடி வருகிறது. இது குறித்து குரும்பூர் மலைப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே, ஜேசிபி இயந்திரம் மூலம் விழுந்துகிடக்கும் யானையை தூக்கி நிறுத்தும் பணியில் வனத்துறையினர் தயாராகி வருகின்றனர். அங்கு வனக்கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக்குழு சிகிச்சை அளிக்க விரைந்துள்ளனர்