காவிரி பிரச்னையில் ஸ்டாலின் மௌனம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
காவிரி பிரச்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மௌனம் காக்கிறார் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
அதிமுக சார்பில் திருச்சியை அடுத்துள்ள வண்ணாங்கோவில் பகுதியில் மக்களவைத் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் 40 வேட்பாளர்கள், விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 41 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்துவைத்து எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் எந்தவொரு தேர்தல் என்றாலும் அதிமுக - திமுக இடையே தான் போட்டி என்பதை நாடே அறியும். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், கடந்த இரு தினங்களாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜகவையும், என்னையும் விமர்சனம் செய்தே பேசுகிறார். அவரிடம் பேசுவதற்கு வேறு விஷயம் இல்லை. பொம்மை முதல்வராக செயல்படுகிறார். திமுக குடும்பத்திடம் இருந்து தமிழகத்தைக் காப்பதற்காகவே கட்சி தொடங்கியவர் எம்ஜிஆர். அவர் கட்டிக் காத்து தந்த கட்சியையும், தமிழகத்தையும் பாதுகாப்பாக வைத்திருந்தவர் ஜெயலலிதா.
அவர்களது வழியில் தமிழகத்தைக் காக்கவும், தமிழர்களின் உரிமையை மீட்கவும் அதிமுக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஆனால், தங்களது ஆட்சிக் காலம் முழுவதும் தமிழகத்துக்கு துரோகம் செய்வது, குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ஆட்சி, கட்சி, பதவியில் இருக்க வேண்டும் என விரும்புகிறதுதிமுக. அதிமுக ஆட்சி என்பது தமிழகத்துக்கு எப்போதும் பொற்கால ஆட்சி. ஆனால், திமுக ஆட்சி அலங்கோல ஆட்சி. கடந்த 3 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியாவது கொண்டுவரப்பட்டுள்ளதா?. நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதாக வாக்குறுதி அளித்தனர். அது நடந்திருக்கிறதா?. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டடம் கட்டவில்லை என செங்கல்லை எடுத்துக் கொண்டு பேரவைத் தேர்தல் முதல் இப்போது வரை வலம் வருகின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்ற திமுக கூட்டணியின் 38 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்ய முடியாதது ஏன்? என்றார் அவர். இக் கூட்டத்தில், தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலர் எல்.கே. சுதீஷ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி, எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி மாநிலப் பொதுச் செயலர் பி.வி. கதிரவன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.