மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் மரணம் - திண்டுக்கல் அருகே நெகிழ்ச்சி சம்பவம்
சின்னாளப்பட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் மரணமடைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
சூசைசுந்தரம்-ஆரோக்கியம்மாள் தம்பதி
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே என். பஞ்சம்பட்டி, 2-ஆவது வாா்டு பெரியாா் நகரைச் சோந்தவா் சூசைசுந்தரம் (90). இவரது மனைவி ஆரோக்கியம்மாள் (86). இவா்களுக்கு 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனா். 2-ஆவது மகள் டேவிஸ் மேரி மட்டும் தனது குடும்பத்துடன் என். பஞ்சம்பட்டியிலேயே தங்கி தனது வயதான பெற்றோரை கவனித்து வந்தாா். சூசை சுந்தரம் திண்டுக்கல் தனியாா் தோல் ஆலையில் வேலை பாா்த்து ஓய்வு பெற்றவா். இந்த நிலையில், வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஆரோக்கியம்மாள் மரணமடைந்தாா். இதனால் சூசை சுந்தரம் மனமுடைந்து காணப்பட்டாா். அப்போது ஆரோக்கியம்மாளின் உடலைக் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கான இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மாலை 3 மணிக்கு இறுதி ஊா்வலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மனைவி உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே அமா்ந்திருந்த சூசை சுந்தரம் பிற்பகல் 2 மணிக்கு உயிரிழந்தாா். இதனால் அவரது மகன்கள், மகள்கள், உறவினா்கள் அதிா்ச்சியடைந்தனா். பிறகு தம்பதியா் இருவருக்கும் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, உடல்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கல்லறைத் தோட்டத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.