தேர்தல் பத்திர நன்கொடையில் பாஜக அரசு மிகப்பெரிய ஊழல் - பீட்டர் அல்போன்ஸ்

தேர்தல் பத்திர நன்கொடையில் பாஜக அரசு மிகப்பெரிய ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதால், மோடி அரசை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்பியும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

Update: 2024-03-15 13:58 GMT

பீட்டர் அல்போன்ஸ்

தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு வந்த பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் என்பது ஜனநாயக மரபுப்படியும், ஒரு பாராளுமன்ற ஜனநாயக நாட்டில் எப்படி தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும், ஆனால் அப்படி எந்த வழிகாட்டுதலும் ஏதும் பின்பற்றப்படவில்லை. முதலில் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்கள் மட்டுமே இருந்து தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பது என்பது எந்தவிதமான நியாய, தர்மத்துக்கும் உட்படாத ஒரு ஏற்பாடு. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இதில் இடம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது என்ற உடனேயே, நேற்று (வியாழக்கிழமை) அவசர அவசரமாக அந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.

அதிலும், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற கட்சியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஆதிரஞ்சன் சவுத்ரிக்கு முறையான தகவல்கள் கொடுக்கப்படவில்லை. யாருடைய பெயர்கள் எல்லாம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது, அவர்களுடைய தகுதிகள் என்ன இதுபோன்ற எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை. கூட்டம் நடப்பதற்கு முன்பாக 10 மணி நேரத்துக்கு முன்பு சில பெயர்களை கொடுத்துவிட்டு அவர்களை கூட்டத்துக்கு அழைத்துள்ளனர். அவர்களால் கூட்டத்தில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. இந்தச் சூழலில் இன்று தேர்தல் பத்திர நன்கொடை தகவல்கள் வந்துள்ளது. சுதந்திர இந்தியாவில் இதுவரை இப்படிப்பட்ட மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதில்லை.

அரசாங்கமே ஒரு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதை போல, மிகப்பெரிய தொழில் அதிபர்களை மிரட்டி, அவர்களது வீடுகளில் வருவாய் புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறைகளை ஏவிவிட்டு அவர்களது வீடுகளில் சோதனை செய்து, அவர்கள் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் அவர்களது வீட்டில் சோதனை நடைபெறும், அதே நேரத்தில், அவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை வசூலித்திருப்பது ஒரு வழிப்பறி கொள்ளையை விட மோசம். அப்படிப்பட்ட மோசமான செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பது வருத்தமான செய்தி, கண்டிக்கதக்கது. இதற்கு பொறுப்பேற்று மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் முறையான செயல்.

கடந்த காலங்களில் மிக சாதாரணமான செயல்களில் எல்லாம் மன்மோகன்சிங் அரசை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் கேட்டார்கள், இப்போது இவ்வளவு பெரிய கொடுமை சுதந்திர இந்தியா வரலாற்றில் இல்லாத கொடுமை நடந்துள்ளது. தேர்தல் வரும்போது எல்லாம் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது என்பது பாஜகவுக்கு வாடிக்கையான ஒன்று, இந்த தேர்தல் பத்திரங்கள் குறித்து செய்திகள் தலைப்புச் செய்திகளாக வருவதால், அந்த தலைப்புச் செய்தியை திருடிக் கொள்ளவே பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு என அறிவித்துள்ளனர். அந்த 2 ரூபாய் குறைப்பு என்பது தலைப்பு செய்தியாக வந்தால், தேர்தல் பத்திரங்களைப் பற்றிய செய்திகள் சிறிய செய்திகளாகி விடும் என எதிர்பார்த்தார்கள்.

ஆனால், அவர்களது எதிர்பார்ப்புக்கு மீறி, பல தலைப்புச் செய்திகளாகி, இந்த இந்தியாவினுடைய ஆன்மாவையே தட்டிக் கேட்டும் செய்தியாக வந்துள்ளது. தேர்தல் வரும்போது பெட்ரோல் விலையை குறைப்பதும், தேர்தல் முடிந்ததும் விலையை கூட்டுவதும் பாஜகவுக்கு கைவந்த கலை. பிறமாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக நிற்கும் கட்சிகள் வெற்றி பெற்றால், அந்த வெற்றி இண்டியா கூட்டணிக்கான வெற்றியாக தான் இருக்கும்" என்றார்.

Tags:    

Similar News