கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும் - பொன்முடி
கடந்தாண்டை போலவே கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.;

கடந்தாண்டை போலவே கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வி துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. உயர்கல்வித்துறை தரப்பில் அமைச்சர் பொன்முடி பதிலுரை அளித்து பேசும்போது, பெண்கள் எல்லாம் படிக்க முதலமைச்சர் கொண்டுவந்த திட்டம் புதுமைப்பெண் திட்டம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கெல்லாம் உயர் கல்விக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் கொண்டு வந்தவர் தமிழக முதலமைச்சர். இந்த ஆண்டு தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டத்தையும் கொண்டு வந்தவர் தமிழக முதலமைச்சர்.
அனைவரும் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டவர். பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் கடந்த ஆண்டு மட்டும் 28,601மாணவர்கள் சேர்ந்துள்ளனர் சென்னை மாநில கல்லூரியில் 47 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படிப்பது அதிகரித்து உள்ளது. இதுதான் புதுமைப்பெண் திட்டத்தின் வெற்றி புதுமைப்பெண் திட்டத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டில் 43,619 பேர், 2022-23 ஆம் கல்வியாண்டில் 54004 பேர், 2023-2024 ஆம் கல்வியாண்டில் 63027 என்று மொத்தம் மூன்று ஆண்டுகளில் 2.73 லட்சம் மாணவிகள் புதுமை பெண் திட்டம் மூலம் பயன்பெற்று உள்ளனர்.
இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போலவே அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 20% அதிகரிக்கப்படும். தனியார் கல்லூரியில் 10% மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15% சேர்க்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.