ஆளுநர் என்கிற பதவியையே தூக்கி வீச வேண்டும்: சீமான் ஆவேசம்

Update: 2023-10-21 12:10 GMT

சீமான் ஆவேசம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட மறுத்ததற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராக விளங்குபவர் என். சங்கரய்யா. வாழ்நாள் முழுவதையும் சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்தவர். அவரது இந்த சமூகப் பணிகளை கெளரவிக்கும் விதமாக தமிழக அரசு அவருக்கு தகைசால் விருதை அண்மையில் வழங்கி பெருமைப்படுத்தியது. இந்நிலையில், அவருக்கு கெளரவ டாக்டர் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முடிவு செய்து, அதற்கான தீர்மானத்தையும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றியது. ஆனால், இதற்காக கோப்பில் கையெழுத்திய ஆளுநர் ரவி மறுத்து வருகிறார். 

இந்த விவகாரம் தொடர்பாக சீமானிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "முதலில் சங்கரய்யானா யாருனு தெரியுமா ஆளுநருக்கு? ஒரு கொடுமைதான் இதெல்லாம். இந்த ஆளுநரை நீக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லக்கூடாது. ஒட்டுமொத்தமாக ஆளுநர் என்ற பதவியையை தூக்கிரணும். ஆளுநர் என்ற பதவியே தேவையில்லைனு நான் சொல்றேன். எதுக்கு ஆளுநர் பதவி? 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரமும், உரிமையும் ஒரு நியமன உறுப்பினருக்கு எப்படி வருது? என்ன ஜனநாயகம் இது? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைக்கு இல்லாத உரிமையை ஒரு தனிநபருக்கு யார் கொடுத்தது?" என சீமான் கேள்வியெழுப்பினார்.

Tags:    

Similar News