நகை கடையில் ரூ.6 கோடி மதிப்பிலான போலி ஹால்மார்க் நகை பறிமுதல்
புதுக்கோட்டை நகைக்கடையில் இந்திய தர நிர்ணய பணியகத்தின் (பிஐஎஸ்) அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிஐஎஸ் ஹால்மார்க் உடன் HUID எண் இல்லாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 6 கோடி மதிப்பிலான 9 கிலோ 151 கிராம் எடையுடைய தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தங்க நகைகளை விற்பனை செய்ய தங்க நகைகளுக்கு பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரையுடன் ஆறு இலக்க HUID எண் கட்டாயம் என்றும் HUID இல்லாமல் தங்க நகைகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் மாணிக்கம் என்பவர் அவரது மனைவி பெயரில் உரிமம் பெற்று நடத்திவரும் லிங்கேஸ்வர் நகை கடையில் விற்கப்படும் தங்க நகைகள் பிஐஎஸ் ஹால்மார்க் உடன் HUID எண் இல்லாமல் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது.
இந்த புகாரைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த இந்திய தர நிர்ணய பணியகத்தின் (பிஐஎஸ்) அதிகாரிகள் மூன்று பேர் இன்று சம்பந்தப்பட்ட நகைக் கடைக்கு சென்று காவல்துறையினரின் பாதுகாப்போடு அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் அந்த கடையில் விற்கப்பட்ட தங்க நகைகளில் பி ஐ எஸ் ஹால்மார்க் உடன் HUID எண் இல்லாமல் இருந்ததும் HUID என் இல்லாமல் நகைகளை விற்பனை செய்ததும் தெரிய வந்ததை தொடர்ந்து 9 கிலோ 151 கிராம் எடையுடைய சுமார் 6 கோடி மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நகைக்கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்போகிறார்களா அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறார்களா என்பது பின்னர் தெரியவரும்.